விடாமுயற்சி:
இன்று காலை முதலே 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவில்லை என ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வட்டமிட்டு வந்த நிலையில், அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த பொங்கலுக்கு 'விடாமுயற்சி' திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறி வந்தனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு, இந்த படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், பலரும் நம்பிக்கையோடு 'விடாமுயற்சி' படத்தை பொங்கல் திருவிழாவோடு சேர்த்து கொண்டாட காத்திருந்தனர்.
லைகா அறிக்கை:
இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, லைகா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். இப்படிக்கு லைகா குழுமம் என தெரிவித்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது.
விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை:
கடைசியாக அஜித் நடிப்பில், துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 2024-ல் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. எப்படியும் 2025-ன் துவக்கத்திலேயே மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு, இந்த படத்தை எதிர்பார்த்தனர். ஆனால் ரிலீசுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில், தற்போது மீண்டும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம், ஹாலிவுட் திரைப்படமான 'பிரேக் டவுன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ள நிலையில், அர்ஜுன், ரெஜினா கசண்டா, ஆரவ், ரம்யா சுப்ரமணியன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.