தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் இன்று தனது 24வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் அஜித்-ஷாலினி
1979 ஆம் ஆண்டு பிறந்த ஷாலினி தனது 4வது வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி விட்டார். பேபி ஷாலினி என்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் தெரியாதவர்கள் கிடையாது. சிவாஜி, ரஜினிகாந்த், அர்ஜூன் என அன்றைய கால முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். பின்னர் 1997 ஆம் ஆண்டு ஷாலினியை சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குநர் பாசில், காதலுக்கு மரியாதை படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். சினிமாவில் விருப்பமே இல்லாத ஷாலினி கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என மொத்தமே 5 படங்களில் நடித்தார்.
1992 ஆம் ஆண்டு அமராவதி படம் தமிழில் அஜித்குமார் ஹீரோவானார். 1999ல் முன்னணி ஹீரோவாக வளர்ந்தன் நிலையில் ஷாலினியுடன் இணைந்து “அமர்க்களம்” படத்தில் நடித்தார்.
காதல் வரவைத்த பாடல்
சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் “சொந்த குரலில் பாட” என்ற பாடலை ஷாலினி பாடியிருந்தார். இந்த பாடல் அஜித்துக்கு மிகவும் பிடித்து போக, அதுவே காதல் வர காரணமாவும் அமைந்தது. அஜித்தின் எண்ணத்தை புரிந்த இயக்குநர் சரண் அந்த பாடலை கேசட்டில் திரும்ப திரும்ப வருமாறு 10 முறை பதிவு செய்து கொடுத்துள்ளார். அஜித்தின் காதலை புரிந்து ஷாலினியும் ஏற்றுக்கொண்டார். இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு அரசியல் மற்றும் திரையுலக சார்ந்த முக்கிய நபர்கள் அனைவருமே பங்கேற்றனர்.
இந்த தம்பதியினருக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மகளும், அதன் பிறகும் ஒரு மகனும் பிறந்தனர். முழுக்க முழுக்க இல்லற வாழ்வில் இருந்த ஷாலினி கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார். கணவர் அஜித், குழந்தைகளுடன் செலவிடும் நேரங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தி வருகிறார். இன்று 24வது திருமண நாளை கொண்டாடும் அஜித் - ஷாலினி தம்பதியினர் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடி வரிசையில் முக்கியமானவர்களாக என்றும் கொண்டாடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.