இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் உடல்நலக் கோளாறு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைக் கவனித்துக் கொண்ட செவிலியர்களுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியதைப் பகிர்ந்துள்ளார். 


இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இந்த வாரம் காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதனைக் குறித்து அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  `கொரோனா தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைக்கும், பிந்தைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு.. காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.. ஆனால் உங்களோடு நேரம் செலவழிக்க அழகான, ஊக்கமூட்டுகிற, சுறுசுறுப்பான மருத்துவர்கள் இருக்கும் போது, உங்கள் உடல் பிரச்னைகள் பெரிதாகத் தெரிவதில்லை. எனது மருத்துவர் பிரித்திகா சாரியுடன்.. பெண்கள் தினத்திற்கு முந்தைய நாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். 



இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தன்னைக் கவனித்துக் கொண்ட செவிலியர்களுடன் படங்களைப் பதிவிட்டுள்ள ஐஷ்வர்யா ரஜினிகாந்த், அந்தப் பதிவில், `கொரோனாவுக்குப் பிந்தைய உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், என்னைப் பார்த்துக் கொண்ட அழகான செவிலியர்களுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். கவனித்துக் கொள்ளுதல் என்ற அடிப்படை உணர்வுடன் அனைத்து பெண்களும் பிறந்துள்ளனர்.. தாங்கள் வெளிப்படுத்தும் எல்லையில்லா அன்புக்காக அனைத்து பெண்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கொண்டாடப்பட வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் பெண்களே அடிப்படைக் காரணம் என்பதால் என் மகன்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் வரும் பெண்களை மதிக்கக் கற்றுத் தருகிறேன். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் மீது அன்பு செலுத்துங்கள்.. வாழ்க்கை உங்கள் மீது அன்பு செலுத்தும்.. இங்குள்ள சூப்பர் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார். 






ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் இந்தப் பதிவுக்குப் பல்வேறு ரசிகர்களும், பிரபலங்களும் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப விரும்புவதாக கமெண்ட்களில் தெரிவித்திருந்தனர்.