இன்று உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன்களான அழகான தருணத்தைப் படமாகவும், தன் மகன்களைப் பற்றிய தனது கவிதையையும் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, மார்ச் 21ஆம் தேதியை உலக கவிதை தினம் என அறிவித்தது. அதன்படி, பலரும் இந்தத் தினத்தில் கவிதைகளையும், கவிஞர்களையும் கொண்டாடும் பதிவுகளை இன்று இணையம் முழுவதும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தாய்மையைப் பற்றிய தனது கவிதையையும் பகிர்ந்துள்ளார்.
அதில் கருவில் தன் மகன்களின் உதையைப் பொறுத்துக்கொண்டு, இன்று மகன்களின் முத்தத்தை மகிழ்வதாகவும், தினமும் கடவுளிடம் தன் மகன்களை அளித்ததற்காக நன்றி சொல்வதோடு, தன் நன்றிக் கடனைப் பிரார்த்தனையால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும், இந்த அன்பைத் தனது மகன்களால் அளவிட முடியாது என்றாலும், இருவரும் வளர்ந்து செழிப்பதைத் தன் செல்வமாக எந்நாளும் வைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.
சமீபத்தில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் ஆகியோர் தங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்த பிறகு, இருவரின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகிய இருவரும் தங்கள் தந்தை தனுஷுடன் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வைரலாகினர்.