மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில். கேது பகவான் கோயில் ( ஸ்தலம்) என அழைக்கப்படும் இந்த கோயிலில் சவுந்தரநாயகி அம்மனுடன் நாகநாதர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ள இந்த கோயிலில் கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேது பெயர்ச்சி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி பெயர்ச்சி அடைவதே கேது பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் ராகு மேஷத்திற்கும், விருச்சிக ராசியில் இருக்கும் கேது துலாமிற்கும் 2022 மார்ச் 21 தேதி இன்று மதியம் 3:14 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். அதனைத் தொடர்ந்து 2023 அக்டோபர் 8 வரை அந்த ராசியில் இருப்பர்.
இந்நிலையில் இன்று மதியம் 3:14 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலில் காலை முதல் சிறப்பு யாகம், தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய யாக குடங்கள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் தலைமை குருக்கள் கல்யாணசுந்தரம் மகா அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கேது பகவானுக்கு பால், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகமும், பின்னர் மலர் அலங்காரமும் செய்யபட்டு மதியம் 3.14 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கொரானா கட்டுப்பாடுகள் தளர்வை அடுத்து கேது பெயர்ச்சி விழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குணசேகரன் செய்திருந்தார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட காவலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இங்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிலையில் இந்தாண்டு கோயில் நிர்வாகத்தினர் விழா குறித்து போதிய அறிவிப்பு வெளியிடாத நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.