சமூக வலைதள பயன்பாடு என்பது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாக மாறிவிட்டது. தினசரி அவர்களின் வாழ்க்கையில் நடப்பதை அப்டேட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த போதிய அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.


சமீப காலமாக சோசியல் மீடியா மூலம் மற்றவர்களின் கணக்குகளை ஹேக்கிங் செய்து ஆதாரங்களை கைப்பற்றப்பட்டு வருகிறது.  சாமானிய மக்களின் கணக்குகளை ஹேக்கிங் செய்வதால் பெரிய அளவில் பயன் இல்லை என்பதால் பிரபலமானவர்களின் கணக்குகள் பெரும்பாலும் ஹேக்கிங் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. 


 



சிறந்த நடிகை:


தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1996ம் ஆண்டு திரையில் தோன்றியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் அட்டகத்தி, 420 போன்ற ஏராளமான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தது அனைவரின் பாராட்டுகளை குவித்தது. அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பல விருதுகளை குவித்துள்ளார். 


ட்விட்டர் கணக்கு ஹேக்:


தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். லட்சக்கணக்கான ஃபாலோவர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். அப்படி இருக்கையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மையிலேயே தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதா என்பது புரியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் தனது ட்விட்டர் கணக்கை விரைவில் மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 


அடுத்தடுத்து ரிலீஸ் காத்திருக்கிறது: 


தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடிக்கும் 'தீராக் காதல்' திரைப்படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் ரோஹின் வெங்கடேசன். இவர் ஏற்கனவே பெட்ரோமாக்ஸ் மற்றும் அதே கண்கள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


இந்த ரொமான்டிக்  ட்ராமா திரைப்படத்தில் ஷிவதா, பேபி விரிதி விஷால் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படங்கள் ரிலீஸாக இருக்கும் சமயத்தில் அவரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஐஸ்வர்யா  ராஜேஷ் நடிப்பில் ரன் பேபி ரன், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.