நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தின் ட்ரைலெர் வெளியான நாள் முதல் பல்வேறு அமைப்புகளும் இப்படம் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என சர்ச்சைகளை எழுப்பின. 


சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :


பல சர்ச்சைகளையும் தாண்டி 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதன் சிறப்பு காட்சி இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுக்காக திரையிடப்பட்டது. இதில் இஸ்லாமிய சமூகத்தினரை புண்படும்படியாக காட்சிகள் இடம் பெறவில்லை என கூறி இப்படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தெரிவித்துக்கொண்டனர். 


 



வித்தியாசமான ஸ்கிரிப்ட்


படத்தின் ரிலீசுக்கு முன்னரே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு 'ஃபர்ஹானா' படத்தில் தனது தனித்துவமான கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில் 'ஃபர்ஹானா' படம் பற்றிய யோசனை கொரோனா காலகட்டத்திற்கு முன்னரே இயக்குநர் நெல்சன் கூறியிருந்தார். அந்த சமயத்தில் ஓடிடி இந்த அளவிற்கு ட்ரெண்டிங்காக இல்லை. கோவிட் வந்து அனைவரின் வாழ்க்கையை திருப்பி போட்டு விட்டது. அதற்கு பிறகு ட்ரீம் வாரியர்ஸ் உடன் இணைந்து செய்ய திட்டமிடப்பட்டது. ஃபர்ஹானா ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட். வழக்கமான படம் போல அல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தீவிரமான கதாபாத்திரம்.  உண்மையான கேரக்டருடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் சேலஞ்சிங்காக இருந்தது.


பொறுப்பு அதிகம் :


ஒரு ஹீரோவுடன் இணைந்து படம் பண்ணும் போது ஒரு ஹீரோயினாக நாம் ரிலாக்ஸ்டாக ஃபீல் பண்ண முடியும். ஆனால் ஒரு வுமன் சென்ட்ரிக் படத்தில் நடிக்கும் போது அது மிகவும் ஹெக்ட்டிக்காக இருக்கும். ஒரு ஹீரோயினுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். அப்படி படம் சரியாக ஓடாமல் போனால் அனைவரும் ஹீரோயினால் தான் படம் ஃபிளாப் ஆனது என வெளிப்படையாக கூறி விடுவார்கள். அதனால் இப்படத்திற்காக நான் மிகவும் பொறுப்புடன் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். 


நிச்சயம் மாற்றம் வரும் :


திரையுலகில் ஆண் நடிகர்களுக்கு சமமாக பெண்கள் வருவது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவிக்கையில் "ஒரு ஹீரோயின் படம் மட்டும் நன்றாக ஓடிவிட்டால் மட்டும் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள், வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெறும் போது நிச்சயம் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற குறைவான ஹீரோயின்கள் மட்டும் தான் வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.


அவர்கள் அனைவரின் படங்களும் நன்றாக வரவேற்பு பெற்றால் தான் இந்த திரைப்பட துறையும் சமமானதாக மாறும். இது ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. ஆனால் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நிச்சயமாக இந்த சினிமா துறையில் மிக பெரிய மாற்றம் நிகழும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.