மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து ஐஸ்வர்யா ராயும் நடிக்கிறார். இரு பாகங்களாக வெளியாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திரைப்படத்தில் அவருக்கு இரு வேடங்கள் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது. ஒன்று நந்தினி மற்றொன்று நந்தினியின் அம்மா மந்தாகினி. நந்தினி பொன்னியின் செல்வன் கதையின் முக்கியமான நெகட்டிவ் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இது கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் என்பதால், பல முக்கிய கதாப்பாதிரங்களையும், கதையோட்டத்தியத்தையும் சமூக வலைதளங்கள் விவாதித்தெ நிறைய சஸ்பென்ஸ்களை உடைத்திருக்கின்றனர். ஆனாலும் திரைப்படம் குறித்த பல செய்திகளை மறைமுகமாக வைத்திருக்க படக்குழு பாடாய் பட்டு வருகிறது. அதனாலேயே படம் குறித்த செய்திகளை வெளியிட்டு படக்குழு ப்ரோமோஷன் வேலைகள் செய்ய பெரிதாக சிரத்தை எடுப்பதில்லை. தானாகவே அடிக்கடி பேசுபொருளாவதற்கு காரணங்கள் ஏராளமாக வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் நடிக்கும் நடிகர் நடிகையரின் தோற்றங்களை சஸ்பென்ஸாக வைத்திருப்பதில் படக்குழு உறுதியாக இருந்தது. இதனிடையே அனைத்தையும் மீறி படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், ஐஸ்வர்யா ராய் சிகப்பு புடவையணிந்து நின்றுகொண்டிருக்க சுற்றிலும் படக்குழுவினர் சூழ்ந்துள்ளனர். அவரருகே ஒரு பெரிய பூம் மைக்கும் நிற்கவைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் தோடுகள், தங்க சங்கிலி, வளையல்கள் என உடல்முழுவதும் தங்க நகைகள் அணிந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியானதில் படக்குழு அதிருப்தியில் உள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்ட சமூக வலைதள அக்கவுன்ட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளது.
கல்கியின் நாவல், தென்னிந்தியாவின் ஆளுமைமிக்க மன்னர்களுள் ஒருவரான அருள்மொழி வர்மனின் ஆரம்ப கால கதைகளை பேசுகிறது. பிற்காலங்களில் ராஜராஜ சோழன் என்று அறியப்பட்டவர்தான் அருள்மொழி வர்மன். இதை திரைப்படமாக்க தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பலர் முயன்றிருந்தாலும், ஒருவழியாக மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரித்து இயக்கிவருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மணிரத்னத்துடன் இணைந்து இளங்கோ குமரவேலும், எழுத்தாளர் ஜெயமோகனும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இதற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணிபுரிகிறார்.
ஐஸ்வர்யா ராய், மத்திய பிரதேசத்தின் ஓர்ச்சாவில் தனது மகளுடன் தங்கி படத்தின் ஷூட்டிங் முடித்து இரு நாட்கள் முன்புதான் மும்பை திரும்பினார். ஐஸ்வர்யா ராயின் கடைசி திரைப்படம் 2018-ஆம் ஆண்டில் ராஜ்குமார் ராவ், அனில் கபூர் நடித்த ஃபாணி கான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.