பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், கட்சி உறுப்பினருமான கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட யூடியூபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த யூ ட்யூபரும் மற்றும் அவரது நண்பருமான வெண்பா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிக்கையாளர் மற்றும் அவரது நண்பரான வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை Ex. IPS அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள யூடியூபர் மற்றும் அவரது நண்பர் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் கட்சி உறுப்பினருமான கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. கே.டி.ராகவனை அடுத்து கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களும் வெளியிடப்படும் என அந்த யூடியூபர் எச்சரித்திருந்த நிலையில் தற்போது அவரது யூடியூப் தளம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
கே.டி.ராகவன் வீடியோவை வெளியிட யூடியூபருக்கு கட்சித் தலைவர் அண்ணாமலைதான் உந்துதலாக இருந்தார் என சமூக வலைதளத்தில் தகவல் பரவின. இதையடுத்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்திருந்தார். மேலும் கே.டி.ராகவன் தன் மீதான புகாரைத் தவறென்று நிரூபிப்பார் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட யூட்யூபரின் செயல்களுக்குக் கட்சி நிர்வாகம் பொறுப்பாகாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையேதான் தற்போது அவரது யூட்யூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. யூட்யூப் தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.
'நான் அப்படிச் சொல்லவில்லை’ ராகவன் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு!