எட்டாவது உலக அதிசயமே என என்றும் கொண்டாடப்படும் ஒரு கார்ஜியஸ் நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு இன்று 50வது பிறந்தநாள் என்றால் நம்ப முடிகிறதா மக்களே! ஆம் இந்த 50 கேஜி தாஜ்மஹாலுக்கு இன்னைக்கு பர்த்டே!
கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். பாலிவுட் திரையுலகையே ஒரு கலக்கு கலக்கினார். தமிழ் சினிமாவில் இருவர் படம் மூலம் அறிமுகமானார், அவரின் மானசீக குரு மட்டுமின்றி ஆல் டைம் ஃபேவரட் குரு என்றால் அது மணிரத்னம் தான். ஏராளமான சமூக சேவைகளை இன்று வரை சைலண்டாக செய்து வருபவர், பணத்தைக் காட்டிலும் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், மிகவும் மரியாதையானவர், அழகானவர், நளினமானவர், எளிமையானவர் என பல விஷயங்கள் ஐஸ்வர்யா ராய் பற்றி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி இத்தனை பெருமைகளை பெற்ற ஐஸ்வர்யா ராய் இன்று வரை தனது ஹீரோயின் அந்தஸ்தை எந்த இடத்திலும் விட்டு கொடுத்ததே இல்லை. அவரின் அறிமுகம் தொடங்கி இன்று வரை கடந்த 26 ஆண்டுகால இந்திய சினிமா கொண்டாடும் ஒரு அசத்தலான நடிகையாக இருந்து வருகிறார் என்பது ஐஸ்வர்யா ராய் தனிச் சிறப்பு.
மற்ற மொழி நடிகைகள் பலரையும் தமிழ் சினிமா கொண்டாடியுள்ளது. அந்த வரிசையில் இன்று வரை முதலிடத்தை தக்க வைத்து இருப்பவர் ஐஸ்வர்யா ராய். அமிதாப் பச்சன் மருமகளாக இருந்த போதிலும் தனது திரைப் பயணம், குடும்ப வாழ்க்கை, மாடலிங், விளம்பரம் என பல துறைகளிலும் கலக்கி வருகிறார்.
இன்று வரையில் வெர்சடைல் நடிகையாக இயங்கி வருகிறார். தன்னுடைய நளினமான பேச்சு, நடனம், நடிப்பு, கொள்ளை கொள்ளும் அழகு என ரசிகர்களை இன்றும் கைக்குள் இறுக்கிப் பிடித்து வைத்துள்ளார். அதற்கு உதாரணம் தான் பொன்னியின் செல்வன் படத்தின் மந்தாகினி, நந்தினி கதாபாத்திரங்கள். ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தை கூட இத்தனை தேஜஸூடன் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்.
இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கினார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். வயது அதிகமாக பொலிவிலும் தோற்றத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் வயது அதிகரிக்க அழகும் அதிகரிக்கும் அதிசயமான ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!