Aishwarya Arjun - Umapathi Wedding: நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமய்யா மகன் உமாபதி இருவரது திருமணம் நேற்று (ஜூன்.10) இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா - உமாபதிக்கிடையே மலர்ந்த காதல்!
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக 90கள் முதல் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அர்ஜூன் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் 2013ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், அதன் பின் காதலின் பொன் வீதியில், சொல்லிவிடவா என சில படங்களில் நடித்து பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இதனிடையே இவருக்கும் நடிகர் அர்ஜூன் பங்குபெற்ற பிரபல அதிரடி ஆக்ஷன் நிகழ்ச்சியான ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் உமாபதிக்கும் காதல் என சென்ற ஆண்டு தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து இவர்களது கொண்டாட்டமான நிச்சயதார்த்தம் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டது.
திருமணக் கொண்டாட்டம்
தம்பி ராமய்யாவின் மகனான உமாபதி 2017ஆம் ஆண்டு ‘அதாகப்பட்டது மக்களே’ எனும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பின் மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது காதல் இருவீட்டார் சம்மதத்துடன் கைகூட, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று முன் தினம் இவர்களது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டமான ஹல்தி புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் இருவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நடிகர் அர்ஜூன் தீவிர ஆஞ்சநேயர் பக்தராக பல ஆண்டுகளாக வலம் வரும் நிலையில், இவர்களது திருமணம் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், காதல் திருமணம் செய்துகொண்டுள்ள ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறார்கள்.
இவர்களது திருமண ரிசெப்ஷன் நிகழ்வு விரைவில் இருக்கும் என்றும், இந்த விழாவில் பிரபல சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Kamal Haasan: கல்கி ட்ரெய்லரில் 3 நொடிகளில் அலறவிட்ட கமல்ஹாசன்.. படத்தில் இவ்வளவு நேரம் தான் வருவாரா!