வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், பசுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898AD'. உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.



படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாக வெளியாக ரசிகர்களின் ஆர்வத்தை அது பன்மடங்காக எகிற வைத்தது. அந்த வகையில் அமிதாப் பச்சன் போஸ்டர், தீபிகா படுகோன் புகைப்படம் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கமல்ஹாசனின் தோற்றம் மட்டும் வெளியாகாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியது. 


அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கல்கி 2898AD படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளதால் படத்தின் ட்ரெய்லரையும் அந்தந்த மொழிகளில் வெளியிட்டது.  3.02 நிமிடங்களுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 



பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் அதுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மிகவும் பிரமாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் கிருஷ்ணரின் கல்கி அவதாரத்தை சுற்றிய அறிவியல் புனைவாக உருவாக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் தோற்றத்தை மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். 


 



வெளியாகியுள்ள 'கல்கி 2898AD' ட்ரெய்லரில் அறிவியல் சக்தி மற்றும் கடவுள் சக்தி இடையே நடைபெறும் போர் போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் தோற்றம், மேக்கப் அவர் பேசும் வசனங்கள், குளோஸ் அப் ஷாட் என அனைத்தும் பார்வையாளர்களை மிரள வைத்து கண்களை விரிவடையச் செய்துள்ளது. அந்த வகையில் நெற்றிக்கண்ணுடன் இருக்கும் கமல்ஹாசனின் குளோஸ் அப் ஷாட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் அவரின் டை ஹார்ட் ரசிகர்கள். 


கல்கி 2898AD திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அந்த வகையில் முதல் பாகத்தில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 19 நிமிடங்களுக்கும் இரண்டாவது பாகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் ஸ்க்ரீனை ஆக்கிரமிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களின் உற்சாகத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.