கூட்டுறவு வங்கிகளில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடனைப் பெறலாம் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கான கட்டணம், டியூஷன் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


வங்கிகள் சார்பில் கல்விக் கடன்


பொதுவாக உயர் படிப்புகளுக்காகக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் சார்பில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழ்நாட்டு அரசின்கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளும், மாணவர்களுக்குக் கல்விக் கடனை வழங்கி வருகின்றன. இதன்படி இதுநாள் வரையில் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வந்தது. 


ரூ.5 லட்சமாக உயர்வு


இந்த நிலையில்,  கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெறலாம் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை அணுகி, உரிய ஆவணங்களைப் பெற்று இந்த கடனைப் பெறலாம்.


கடனை எப்போது திருப்பிச் செலுத்தலாம்?


மாணவர்கள் படிப்பை முடித்து, 6 மாத காலம் முதல் 5 வருடங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். சிறுபான்மையின மாணவர்களுக்குக் குறைந்த வட்டி வீதத்தில் கல்விக் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


மாணவர்கள் தங்களின் புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கான கட்டணம், டியூஷன் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த ஏதுவாக, கல்விக் கடனை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.