நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்வையிட அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வருகை தந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது மகள் சௌந்தர்யா உடன் சென்றுள்ளார்.
எனினும், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் ABP நாடு செய்தி நிறுவனம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டது. அப்போது அவர், ரஜினிகாந்த் வழக்கமான ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காக காவேரி மருத்துவமனை வந்திருப்பதாகவும், அவர் முழுவதுமாக உடல்நலத்தோடு இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ரஜினிகாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து தகவலறிந்த அவரது மூத்த மகள் ஐஷ்வர்யா தனுஷ் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார். அதன்பிறகு அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்புகளில் அவரோடு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
நேற்று மாலை ரஜினிகாந்த் நடித்து, வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள `அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு, ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. மேலும், இன்று தனது குடும்பத்தினருடன் `அண்ணாத்த’ படத்தை சென்னையிலுள்ள ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றில் பார்வையிட்ட ரஜினிகாந்த் படம் முடிவடைந்த பிறகு தன்னுடைய பேரன் வேத்துடன் நிகழ்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து `ஹூட்’ செயலியில் குரல் வழியாகப் பதிவு ஒன்றைச் செய்திருந்தார். சமீபத்தில் `ஹூட்’ செயலியை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கியிருந்தார். அதனை அறிமுகப்படுத்தும் விதமாக, அனைவரையும் `ஹூட்’ செயலியில் இணையுமாறு குரல் வழியாகப் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனை முடிந்து இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது.