கனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘பூமிகா’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர்  ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு சொந்தமான ‘ஸ்டோன் பெஞ்ச்’  இந்த படத்தை தயாரித்துள்ளது.  ஹாரர் - த்ரில்லர் பிரிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க மலை அடிவாரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ”பூமி இருக்குதே இந்த பூமி , நம்மக்கிட்ட ஒவ்வொரு நிமிசமும் பேசிக்கிட்டு இருக்குப்பா.. அது தெளிவா சொல்லுதுங்க, என்ன தெரியுங்களா?..என்னை எனக்கு காப்பாத்திக்க தெரியும், முடிஞ்சா என்கிட்ட இருந்து உன்னை காப்பாத்திக்க “ இப்படியான குரல் பின்னணியில் ஒலிக்க திகிலூட்டும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இந்த வரிகளை வைத்து பார்க்கும்பொழுது , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்களை பூமி வஞ்சம் தீர்ப்பது போன்ற கதைக்கருவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.







இந்த படம் வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஒடிடி தளமான ‘நெட்ஃபிளிக்ஸில்’ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்படும் என ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்திருந்தனர். அதன் படி வருகிற 22-ஆம் தேதி மாலை 3 மணியளவில் பூமிகா படம் , விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பூமிகா படம் விஜய் டிவியில் இருந்து , நெட்ஃபிளிக்ஸிற்கு கைமாறியுள்ளது. 




ஆரம்பத்தில் இருந்தே கதை தேர்வுகளில் அசத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ‘திட்டம் இரண்டு’ , இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. திட்டம் இரண்டு சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் அடுத்த படமான  பூமிகாவும் ஒடிடியில் வெளியாவதால் அப்செட்டில் உள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வரும் , தியேட்டர்களை விரைவில் திறப்பார்கள் என ரசிகர்களும் திரைத்துறையினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் இப்போதைக்கு தியேட்டருக்கு வாய்ப்பில்லை என்பதால் , எடுத்து வைக்கப்பட்ட திரைப்படங்கள் அவுட் டேட்டடாக மாறிவிடக்கூடாது என  திரைத்துறையுனர் ஒடிடி தளத்தை நாடி வருகின்றனர். கொரோனா சமயங்களில் உலகம் முழுவதும் நிறைய திரைப்படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் படி  தியேட்டரில் படம் பார்க்க செல்ல விரும்புவர்களை விட ஒடிடியில் படத்தை பார்க்க விரும்புபவர்கள்தான் அதிகம் என தெரிய வந்துள்ளது. எது எப்படியே தரமான படங்கள் மக்களை சென்றடைந்தால் சரிதானே