உயிரிழந்தவர் என் நண்பர் - விக்ராந்த் மாஸி விளக்கம்
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த கிளைவ் குந்தர் என்பவர் இந்தி நடிகர் விக்ராந்த் மாஸியின் உறவினர் என சமூக வலைதளங்களில் தகவல்கல் பரவி வந்தன. இப்படியான நிலையில் உயிரிழந்தவர் தனது உறவினர் இல்லை என்றும் தனது குடும்பத்திற்கு நல்ல நண்பர் என்றும் விக்ராந்த் மாஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தை தொந்தரவு செய்யாமல் இது குறித்து மேலும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த கிளைவ் குந்தர் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கோ பைலட் என்பது குறிப்பிடத் தக்கது.
அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 230 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் என மொத்தம் 241 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த நாட்டையே இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏர் இந்தியாவின் AI171 விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
அகமதாபாத்தில் இருந்து, லண்டன் சென்ற போயிங் ட்ரீம்லைனர் 787 - 8 ரக விமானத்தில் டேக் ஆஃப்ஃபின்போது ஏற்பட்ட பிரச்சினையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் விமானம் 825 அடி உயரத்தில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கீழே பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது மோதி விழுந்தது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் சிலரும் பலியாகி உள்ளனர்.
“விமானம் கிட்டத்தட்ட 125,000 லிட்டர் எரிபொருளை சுமந்து சென்றது. கீழே விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட விபத்தி, மொத்த விமானமும் பற்றி எரிய அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போனது. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ பரிசோதனைகளுக்குப் பிறகு உடல்கள் உரிய குடும்ப நபர்களிடம் ஒப்படைக்கப்படும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் அமித் ஷா விளக்கமளித்தார்.