Skoda Octavia RS: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் சில கார்களுக்கான இறக்குமதி திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா RS:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனம் விரைவில் தனது ஆக்டேவியா RS கார் மாடலை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. எப்போது சந்தைப்படுத்தப்படும் என அத்காரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், ஆண்டு இறுதியில் வரக்கூடிய பண்டிகை காலத்தின் போது ஸ்கோடா கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், ஒரு வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள இந்த கார், இந்திய சந்தைக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
பழைய சாதனையை முறியடிக்குமா ஆக்டேவியா RS:
ஆக்டேவியா கார் மாடல் குறிப்பாக RS எடிஷன் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விளைவாகவே அந்த காரின் அறிமுகத்தை ஸ்கோடா முடிவு செய்துள்ளது. முந்தைய தலைமுறை ஆக்டேவியா RS 245 காரின் 200 யூனிட்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தபோது, விலை அதிகமாக இருந்தாலும் அந்த பிராண்ட் சார்பில் இதுவரை இல்லாத வகையில் அதிவேகமாக விற்று தீர்ந்தன. அந்த சாதனையை நான்காம் தலைமுறை ஆக்டேவியா முறியடிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆக்டேவியா விலை, இன்ஜின் விவரங்கள்:
புதிய ஆக்டேவியா கார் மாடலில் 265 குதிரைகளின் சக்தி மற்றும் 370Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடிய , 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. 7 ஸ்பீட் DSG கியர்பாக்ஸை கொண்டுள்ள இந்த கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.4 விநாடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) ஆக்டேவியா கார் மாடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் காரணமாக இந்த காரின் விலை ரூ.50 லட்சம் வரை நீளலாம். கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலின் நிலையிலேயே ஆக்டேவியா மாடலும், இந்திய சந்தையில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆக்டேவியா:
25 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் தலைமுறை ஆக்டேவியா கார் மாடலானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அப்டேட்டாகி வெளியான ஒவ்வொரு தலைமுறை ஆக்டேவியாவும் உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வரிசையில் நான்காவது வரிசையும் சந்தைப்படுத்தப்பட உள்ளது. வலுவான கட்டமைப்புக்கு பெயர் போன ஸ்கோடா, ஆக்டேவியா கார் மாடலிலும் அதனை முற்றிலுமாக தொடர்கிறது. நார்மல், ஸ்போர்ட், கம்ஃபர்ட் ஆகிய ரைட் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆக்டேவியா அப்டேடட் அம்சங்கள்:
தற்போதுள்ள மூன்றாம் தலைமுறை ஆக்டேவியா எடிஷனானது 2019ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். புதிய எடிஷனானது ஸ்டைலிங் அப்டேட்களுடன் ஆழமான உட்புற மேம்படுத்தல்களையும் சில புதிய தொழில்நுட்ப அம்சங்களையும் காரில் சேர்த்துள்ளது. அதன்படி , வெளிப்புறத்தில் ஸ்டலிஷ் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 19 இன்ச் அலாய் வீல்கள், புதியதாக வழங்கப்பட்டுள்ள 13 இன்ச் டச்ஸ்க்ரீனில் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்ட கண்ட்ரோல்கள் இணைக்கப்பட்டுள்ளன. 3 ஸ்போக் ஸ்டியரிங் வீலில் ஆர்எஸ் லோகோ, கப் ஹோல்டருக்கு உள்ளே போன் ஹோல்டர்கள், டச்ஸ்க்ரீனை துடைப்பதற்காக சிறிய மைக்ரோஃபைபர் டஸ்டர் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.
கார் மாடல்களை நிறுத்திய ஸ்கோடா:
புதிய காரை இந்திய சந்தைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள அதே சூழலில், ஏற்கனவே இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த சில மாடல்களை நிறுத்தி வைக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளது. அதன்படி, கோடியாக் RS , சூபர்ப் மற்றும் வழக்கமான ஆக்டேவியா ஆகிய கார் மாடல்களின் இந்தியாவிற்கான இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. FTA ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சூழல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஷக், ஸ்லாவியா 2.0 ரெடி:
இதனிடையே, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கைலாக் கார் மாடலில் கவனம் செலுத்த உள்ளதாகவும், குஷாக் மற்றும் ஸ்லாவியாவிற்கான அப்டேட் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில் டீலர் நெட்வர்க்கை வலுவாக்குவது மற்றும் சேவை நிலையங்களை பெரிதாக்குவது போன்ற பணிகளிலும் தீவிரம் காட்டிவருகிறது. கைலாக் அறிமுகத்தை தொடர்ந்து, கார் விற்பனையில் ஸ்கோடா ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. அதோடு இதுவரை இல்லாத வகையில் ஒரு மாத அதிகபட்ச விற்பனையாக, கடந்த மார்ச் மாதத்தில் 7 ஆயிரத்து 422 யூனிட்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI