விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் இறுகப் பற்று. யுவராஜ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


இறுகப்பற்று


இன்றைய தலைமுறையினர் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை மையமாக வைத்து மூன்று கதைகளில் சொல்லியிருக்கிறது இறுகப்பற்று திரைப்படம். வெளியான நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வரும் இறுகப்பற்று திரைப்படத்தின் காட்சிகள், இரண்டாவது நாளில் இருந்து அதிகரித்தன.


இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு ட்விட்டர் பக்கத்தில் இப்படி கூறியிருந்தார். ‘இறுகப்பற்று' திரைப்படம் வார இறுதி நாட்களில் பாக்ஸ்ஆஃபிஸில் மிகச்சிறப்பாக முன்னேறி வருகிறது. முதல் நாளில் இருந்து இரண்டாவது நாளிலேயே 225% வளர்ச்சியை பெற்றுள்ளது. பார்வையாளர்கள் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு ஆதரவு தர தவறியது இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி தயாராகிறது" என்று கூறியிருந்தார்.


சூரியா பாராட்டு






இதனைத் தொடர்ந்து இறுகப்பற்று படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். “ ஒரு நல்ல படம் மக்களின் அன்பைப் பெறுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுகப்பற்று படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளனுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார்.


கார்த்தி பாராட்டு






இந்நிலையில், சூர்யாவைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியும் இறுகப்பற்று படத்தை பாராட்டியுள்ளது படம் மீதான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.


தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி “ திருமண வாழ்க்கையில் கணவன் மனைவியாக இருப்பது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்று இறுகப்பற்று நமக்கு உணர்த்துகிறது. காதலைப் புரிந்துகொள்வதும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்பதுமே உறவுகளை நீடிக்க வைக்க ஒரே வழி. இன்றைய நிலவரத்தை பிரதிபலிக்கும் ஒரு படத்தில் மிக அழகாக நடித்திருக்கும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.