மாமன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை இயக்க இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். படத்தைக் குறித்தான கூடுதல் தகவல்கள் என்ன தெரியுமா?
மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய மாரி செல்வராஜ் இன்று மாமன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். தனது எல்லாப் படங்களிலும் சாதிக்கு எதிரான தனது நிலைப்பாடுகளை தன் கதாபாத்திரங்களின் வழியாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார். வெகு நாட்களாக எதிர்பார்த்து வந்த துருவ் விக்ரமுடன் இந்தப் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.
கபடியை மையப்படுத்திய கதைக்களம்
கர்ணன் படத்திற்கு அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைய இருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பா ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தப் படம் தாமதமாகியது என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படம் தாமதாகியதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தனது கடைசிப் படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக்கொண்டதனால் என்று மாமன்னன் படத்திற்கு பின் தெரிய வந்திருக்கிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்கிற படத்தையும் எடுத்து முடித்துள்ளார் மாரி. தற்போது நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் இந்தப் படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
என்ன அப்டேட்
துருவ் விக்ரமுனுடனான இந்தப் படம் கபடியை மையப்படுத்தியதாக இருக்கும் என்று முன்பே கூறப்பட்டிருந்தது தற்போது கூடுதலாக 1990 காலக்கட்டத்தில் தூத்துக்குடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறதென்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
90-களின் வரலாற்றைத் தேடும் ரசிகர்கள்
எப்போதும் மாரி செல்வராஜின் கதைக்களங்கள் ஏதாவது ஒரு வரலாற்று நிகழ்வை பின்னணியாக கொண்டு அமைக்கப்படுகின்றன. கர்ணன் , மாமன்னன் போன்ற படங்களில் நாம் அதை பார்த்திருக்கிறோம். அதே போல் தற்போது 1990 காலக்கட்டத்தில் இந்த படம் எடுக்கப்பட இருக்கிறது என்று தெரிந்ததும் 90 களில் தூத்துக்குடியில் நிகழ்ந்த சாதி குறித்தான நிகழ்வுகள் ஏதாவது இருக்கிறதா? என்று இணையதளத்தில் விவாதம் கிளம்பி இருக்கிறது. படம் குறித்தான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.