சூரி


வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூரி அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் அவர் நடித்த கருடன் இந்த ஆண்டில் வெற்றிபெற்ற தமிழ் படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்த வெற்றிகள் சூரிக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை 2 படத்தில் நடித்து முடித்துள்ள சூரி தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


விலங்கு இயக்குநருடன் இணையும் சூரி


கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு தொடரை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். கருடன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டுடியோஸ் சூரியின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில்...


”கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கருடன்' படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் புதிய படத்தை தயாரிக்க உள்ளார்  'ஹாட்ரிக் கமர்சியல் ஹீரோ' சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.


இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் 






சூரி -பிரசாந்த் பாண்டியராஜ் -லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்தத் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.


கொட்டுக்காளி


பி.எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள நிலையில் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.