சசிகுமார்
மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம். நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி சைலண்ட் ஹிட் அடித்து பெரும் பாராட்டுக்களைக் குவித்த திரைப்படம் ‘அயோத்தி’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீடு வழங்கப்பட்டு விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளியது.
மீண்டும் இணையும் அயோத்தி கூட்டணி
இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மந்திரமூர்த்தி மற்றும் சசிகுமார் கூட்டணி இணைந்துள்ளது. மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்தப் படத்தில் சசிகுமார் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க இருக்கிறார். கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியனுக்கு நடிகர் சசிகுமாருக்கு இடையில் இணைத் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது இருவரும் இந்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
அசோக் குமார் தற்கொலை வழக்கு
நடிகர் சசிகுமாரின் உறவினர் மற்றும் கம்பேனி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணைத் தயாரிப்பளர் அசோக் குமார். இவர் பைனான்சியரான கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியனிடம் தாரை தப்பட்டை படத்திற்கு 18 கோடி ரூபாய் பெற்றார். இந்த பணத்தை திருப்பிக் கொடுக்க தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார் அசோக் குமார். தனது தற்கொலைக்கு தயாரிப்பாளர் அன்புச் செழியன் தான் காரணம் என்று அசோக் குமார் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் , அமீர் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் அன்புச் செழியனை சிறையில் அடைக்கும்படி குரல் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்பட்டது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து அன்புச் செழியன் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் தற்போது பழைய பிரச்சனைகளுக்கு சமாதானம் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த படம் இருவருக்கும் இடையிலான நட்புறவை வளர்க்கும் விதமாக எடுக்கப் பட்ட முடிவாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் கூறப் படுகிறது.