சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம்  கலவையான விமர்சனங்களை பெற்றாலும் , வழக்கமான ரஜினி படத்திற்கான வசூல் வேட்டை நடத்த தவறவில்லை. அந்த படம் உருவான விதம் குறித்தும் , அந்த படத்தை இயக்குநர் சிவா தனக்கு விவரித்த விதம் குறித்தும் ரஜினிகாந்த் தனது ஹூட் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அண்ணாத்த படத்தை ரஜினிகாந்த் முழு நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் நடித்தாராம். ஆனால் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்திற்கு ஓய்வு தேவைப்படுவதால் இன்னும் இரண்டு படங்களோடு திரைப்பயணத்திலிருந்து விலக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தனது கடைசி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பினை மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவிற்கு கொடுத்திருப்பதாகவும் கோலிவுட் தகவல்கள் தெரிவித்தனர்.




இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு தனது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரிய சாமிக்கு ரஜினி கொடுத்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறாராம் சூப்பர் ஸ்டார். எல்லோரும் ஒன் லைனை மட்டும் கூறிவிட்டு ,முழு கதையை ரெடி செய்துவிட்டு வருகிறோம் என சென்று விடுகிறார்களாம். அண்ணாத்த படம் தனது ரசிகர்களை திருப்தியடைய செய்யவில்லை என்பதால் , மீண்டும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினிகாந்த் இருப்பதால் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். இந்த நிலையில் மீண்டும் தனது திரைத்துறை நண்பரான கே.எஸ்.ரவிக்குமாரையே அடுத்த படத்தை இயக்க சொல்லலாம் என ரஜினிகாந்த் முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது கே.எஸ்.ஆரும் கதைக்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம்.




ரஜினி,  கே.எஸ்.ரவிகுமார் காம்போவில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ‘படையப்பா’, ‘முத்து’,‘லிங்கா’  அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர்.. சில வருடங்களுக்கு முன் ‘ஜக்குபாய்’ என்னும்  படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் தொடக்கத்திலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு ‘கோச்சடையான்’ படத்தில் மிக முக்கிய பங்காற்றினார் கே.எஸ். ரவிக்குமார். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்த ஜோடி இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதுவும் வதந்தியாகவே கடந்துவிட்டது.தற்போது ரஜினிகாந்த் தனக்காக உருவாக்கப்படும் கதைகளை விட , ஆழமான கதைக்கரு கொண்ட , பொது ரசிகர்களையும் ஈர்க்கும் வகையிலான படங்களில்  நடிக்கவே ஆர்வம் காட்கிறாராம் , ஆனால் ரஜினிகாக மாஸ் காட்டுகின்றேன் என கூறி கதையே இல்லாமல் படம் எடுத்துவிடுகின்றனர் சில இயக்குநர்கள். அதனால்தானோ என்னவோ தனது நண்பரையே தேடி சென்றுவிட்டார் ரஜினிகாந்த் என கோலிவுட் பக்கம் கிசு கிசுக்க தொடங்கியுள்ளனர்.