இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது. இருந்தப்போதும்  ஏப்ரலில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை நாளொன்றுக்கு  லட்சத்தைக்கடந்த நிலையில் பல்வேறு உயிரிழப்புகளும் பதிவாகின. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசிகள்  தற்போது 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.


இதனையடுத்து கொரோனா தொற்றிலிருந்து எப்படியாவது உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பலர் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். ஆனால் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தினால் தேவையில்லாத உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டவர்களின் கணக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிகளை மாநில சுகாதாரத்துறைத் தருவதன் காரணமாக எந்த ஆவணங்களும் இன்றி தடுப்பூசி போட்டதாகக் கணக்கு காட்டுகின்றனர். இப்படி மேற்கொள்ளும் பொழுது தான் உயிரிழந்த நபர்களுக்குக்கூட தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மெசேஜ் வருகிறது என அவர்களது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.





தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறிவரும் சூழலில், கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள  ஆரியநாடுஅரசு மருத்துவமனைக்கு 2 மாணவிகள்  15 வயது நிறைவடைந்த நிலையில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்துள்ளனர். ஆனால் மருத்துவமனை முழுவதும் தேடிய நிலையில் அவர்களுக்கு எந்த இடத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரியவில்லையாம். இந்நிலையில் தான் ஒரு இடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்ததைப்பார்த்த அவர்கள் அங்கு சென்று கேட்பதற்கு முன்னதாக அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.  பணியாளர்கள் ஊசி போடுவதற்கு முன்னதாக ஆதார் எண்ணை வாங்கவில்லை என்பதால் அலட்சியமாக 15 வயதுடைய பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.


பின்னர் மாணவிகளிடம் தகவல்களைப்பெற தொடங்கியப்போது தான் சுகாதாரப்பணியாளர்கள் தவறு நடந்துவிட்டது என்பதை அறிந்து இதுக்குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 2 மாணவிகளையும் மருத்துவமனையில் வைத்து உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படுகிறதா ? என தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. பின்னர் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதற்கு பிறகு தான் மருத்துவர்கள் மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட மாணவிகளின பெற்றோர்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவனந்தபுரம் மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார்.





நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ளவதற்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் தான். ஆனால் அதனை ஏதோ கணக்குக்காக மட்டுமில்லாமல் மனித நேயத்துடன் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.