ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


”இனி முடிச்சுட்டுத்தான் திரும்பி வருவேன்”


ஜெயிலர் ட்ரெய்லரில் வருவது போல் “ இதோட நிறுத்திக்கலாமே என்று அவரிடம் கேட்பவர்களுக்கு “ரொம்ப தூரம் போயிட்டேன் இனி முடிச்சுட்டு தான் திரும்பி வருவேன் என்று ரஜினி சொல்வது போல் . தனது சினிமா கரியரை ரஜினி எப்போது நிறுத்திக்கொள்ளப் போகிறார் என்கிற கேள்விகள் ஒருபக்கம் இருக்க ரஜினி என்னவோ அடுத்த அடுத்தப் படங்களுக்கு தயாராகியபடியே இருக்கிறார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்களின் பெயர்களும் தெரிய வந்திருக்கின்றன. ஒவ்வொரு ரஜினியின் படத்திற்கு சம்பவம் பெரிதாகிக் கொண்டேதான் இருக்கிறது.


ஜெய் பீன் இயக்குநருடன் கூட்டணி


ஜெய் பீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் த.செ.ஞானவேல். தனது முதல் படத்தில் மிக ஆழமாக சமூக கருத்தை வெளிப்படுத்தியவர். அதே நேரத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை வெகுஜன சினிமாவிற்குள் கொண்டுவந்து வெற்றியும் பெற்றார். இவரது படம் எந்த அளவிற்கு அங்கீகாரத்தைக் கொடுத்தது என்றால் தனது இரண்டாவது படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் தனது அடுத்தப் படத்திற்கு ரெடியாவிட்டார் ரஜினி. இவர்கள் இருவரின் கூட்டணியில் நிச்சயம் நாம் புதிதான ஒரு கதைக்களத்தில் ரஜினியைப் எதிர்பார்க்கலாம்.


யார் யார் நடிக்கிறார்கள்?


கோலிவுட்டில் எப்படி ரஜினியோ அதே மாதிரி பாலிவுட்டில் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்க்கும் அனுபவத்தை கற்பனை செய்துபாருங்கள். ஞானவேல் இயக்கும் படத்தில் முதல் இணைப்பாக வந்து சேர்ந்தவர் பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன். இவருக்கு அடுத்ததாக நம்  அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர் இந்தப் படத்தில் தற்போது இணைந்துள்ளார். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று நம் இவரைப் பற்றி நிச்சயம் யோசித்திருப்போம். நான் ஈ, ஜெர்ஸி உள்ளிட்டப் படங்களில் நடித்த நானி தான் அந்த நடிகர். தனது உழைப்பிற்கு தகுதியான ஒரு வாய்ப்பை தற்போது வென்றிருக்கிறார் நானி. ரஜினிகாந்தின் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நானி. படத்தில் சுமார் 20 நிமிடத்திற்கு இவரது கதாபாத்திரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இன்னும் இந்தப் படத்தில் இணைய இருக்கும்  நடிகர்களின் பெயர்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.