நடிகர் ஆதித்யா ராய் கபூரை அவரது பெண் ரசிகர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற வீடியோ இணையத்தில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஆஷிக்கி 2 நடிகர்
'ஆஷிக்கி 2’ என்ற ஒற்றைப் படம் மூலம் பாலிவுட் தாண்டி நாடு முழுவதும் உள்ள இளம்பெண்களின் கவனமீர்த்து ட்ரீம் பாய் நாயகனாக உருவெடுத்தவர் நடிகர் ஆதித்யா ராய் கபூர்.
’ஆஷிக்கி 2’ படத்துக்குப் பிறகு அதை போன்று பெரும் ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காவிட்டாலும், ஆதித்யா ராய் கபூருக்கென்று ஒரு தனி ஃபேன் ஃபாலோயிங் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தேர்ந்தெடுத்த படங்களிலேயே நடித்து வந்தாலும், காதல் படங்கள், உடலை சிறப்பாகப் பேணுவது என தன் பெண் ரசிகைகளை தொடர்ந்து தன் வசம் தக்கவைத்துள்ளார் ஆதித்யா ராய் கபூர்.
வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற ரசிகை
இந்நிலையில், முன்னதாக நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்த ஆதித்யா ராய் கபூரை அவரது ரசிகை ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்து அணைத்து முத்தமிட முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஆதித்யா நடித்துள்ள த நைட் மேனேஜர் சீரிஸ் நாளை வெளியாக உள்ள நிலையில் அதன் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது.
அப்போது அங்கு ஏராளமான பாலிவுட் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு வருகை தந்த ஆதித்யா ராய் கபூரை சுற்றி வளைத்த ரசிகைகள் அவருடன் ஃபோட்டோ எடுக்கத் தொடங்கினர்.
பொங்கும் நெட்டிசன்கள்
அப்போது நடுத்தர வயது பெண் ஒருவர் திடீரென ஆதித்யா ராய் கபூரின் அருகில் உரிமையாகச் சென்று அவரைக் கட்டியணைத்து மகிழ்ச்சி பாராட்டினார்.
தொடர்ந்து அவருடைய தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டு அப்பெண் ஃபோட்டோ எடுத்துக் கொண்டதுடன் அவரை திடீரென முத்தமிட முயன்றார்.
இதனால் அதிர்ந்துபோன ஆதித்யா பின்வாங்க முயற்சிக்க, அப்பெண் ஒரே ஒரு முத்தம் என அவரை விடாமல் வற்புறுத்தி, இறுதியாக கைகளில் முத்தமிட்டவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஆதித்யா ராய் கபூரிடம் எல்லை மீறி நடந்து கொண்ட இப்பெண்ணின் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சம்பாதித்து வருகிறது. ”இதே செயலை ஒரு நடிகையிடம் ஆண் ரசிகர்கள் செய்திருந்தால் அது பேசுபொருளாகி இருக்கும்” என்றும், ”இது மிக மோசமான பாலியல் தொல்லை” என்றும் நெட்டிசன்கள் கடுமையாக இப்பெண்ணை விமர்சித்து வருகின்றனர். ’த நைட் மேனேஜர்’ சீரிஸில் நடிகை ஷோபிதா துலிப்பா, அனில் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.