தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எனப்படுபவர் ஷங்கர். இவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் சினிமா மற்றும் விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் மட்டும் வெளியாகி இருந்தாலும், அந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதற்கு ஏற்ற வரவேற்பும் கிடைத்தது.
இந்த இரண்டு படத்திலும் அதிதி ஷங்கர் தான் நடித்த முதல் படமான விருமன் படத்தில் ”மதுரை வீர அழகுல” பாடலும், இரண்டாவது படமான மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டையில் பாடலும் பாடியுள்ளார்.
ஏற்கனவே இவரது முதல் பாடல் விஜய் டீவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பாடியதாகவும், இறுதி நேரத்தில் படக்குழு மாத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தற்போது ஓடிடியில் கலக்கிக்கொண்டு இருக்கும், மாவீரன் படத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில பாடல் ஆகஸ்ட் 16 1947, கர்ணன், குட் நைட் போன்ற படங்களில் பாடல்கள் பாடிய பாடகி மீனாட்சி இளையராஜா குரலில் தான் முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும் அதன்பின்னர், ஏனோ படக்குழு அதனை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர் குரலில் பாடலை ரிலீஸ் செய்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், சில நேரங்களில் தனக்கு நன்றாக பாடவரவில்லை என்றும், நன்றாக பாடி இருந்தால் படத்தில் எனது குரலில் பாடல் வெளியாகியிருக்கும் என நினைத்து அழுவதாகவும், சில நேரங்களில் இதைவிட நல்ல வாய்ப்பு வரும் எனக்கூறி தன்னை தேற்றிக் கொள்வேன் என்றும் பாடகி மீனாட்சி இளையராஜா தெரிவித்துள்ளார்.
குட் நைட் படத்தி ஷான் ரோலன் இசையில் தான் பாடியதைக் கேட்ட மாவீரன் படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கர் தன்னை வண்ணாரப்பேட்டையில பாடலை பாட அழைத்ததாகவும், பாடல் பாடிய பின்னர் படக்குழுவும் இசையமைப்பாளர் பரத் சங்கரும் தன்னை பாராட்டினர் என்றும், இறுதியில் ஏனோ எனது குரலில் பாடலை ரிலீஸ் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் இப்போது வெளிவந்துள்ள நிலையில், சினிமா வட்டாரத்தில் இது குறித்த முனுமுனுப்புகள் அதிகமாகியுள்ளது. குறிப்பாக அதிதி ஷங்கர் தான் நடிக்கும் படத்தில் வரும் பாடல்களை தான் பாட விரும்பினால் அதனை முன் கூட்டியே படக்குழுவிடம் தெரிவித்து பாடலை பாடலாம் என்றும், வளர்ந்து வரும் பாடகரை அவமதிக்கும் படியான செயலை இனிமேல் செய்யாமல் இருந்தால் யாருக்கும் மன உளைச்சல் ஏற்படாது எனவும் கூறிவருகின்றனர். ஆனால் அதிதியின் நெருங்கிய வட்டாரத்தில் கதாநாயகனுடனான டூயட் பாடலை அவரே பாடும்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதிதி பாட ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.