கோவாவில் இரவு கேளிக்கை விடுதியில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கோவாவில் பணியமர்த்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஏ.கோனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி 


கோவாவில் பாகா நகரில் உள்ள ஒரு நைட் பப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பப்பில் ஐபிஎஸ் அதிகாரி ஏ கோன் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் ஆக.7-ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த விடியோவில் தொப்பி அணிந்திருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கோன், ஒரு இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்வது விடியோவில் பதிவாகி உள்ளது. அதன் பின் அங்குள்ள பவுன்சர்கள் அந்த பெண்ணிடம் இருந்து ஐபிஎஸ் அதிகாரியை விலக்கி விடுகின்றனர். அளவுக்கு அதிகமாக குடித்து போதையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.கோன் பவுன்சர்களால் வெளியேற்றப்பட்டு கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



சிசிடிவி காட்சிகளில் பதிவான சம்பவம்


பின்னர் CCTV காட்சிகளில் கோன் மது பாட்டிலுடன் குடிபோதையில் தள்ளாடி நடப்பதும் பதிவாகியுள்ளது. மாநில காவல் துறை தலைவர் உத்தரவின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது டிஐஜி ஏ. கோன் குடிபோதையில் கைகலப்பிலும் ஈடுபட்டதும், பப்பில் இருந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதும் தெரிய வந்தது. சம்பவத்தின்போது அந்த பெண், ஏ. கோனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்றபோது ஏ கோன் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆக.1-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை மருத்துவ விடுப்பிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்: BJP Election Plan: 5 மாநில தேர்தல், களத்தில் 350 எம்.எல்.ஏக்கள்.. கருத்து கணிப்பு நடத்த பாஜக அதிரடி திட்டம்..


நடவடிக்கை எடுக்க மாநில அரசு வலியுறுத்தல்


கோன் 2009 பேட்ச் AGMUT கேடர் அதிகாரி என்று தகவல் வெளியாகியுள்ளது. பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவா பார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் மற்றும் கலங்குட் பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ ஆகியோர் மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பினர். காவல்துறை அதிகாரி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். "


நாங்கள் அவரை பணியிலிருந்து விடுவித்துள்ளோம். இது உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம், உள்துறை அமைச்சகம் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கிறேன்." என்று முதல்வர் சாவந்த் ஏஎன்ஐயிடம் பேசும்போது கூறினார். 






இடைநீக்கம் செய்த உள்துறை அமைச்சகம்


அதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த உள்துறை அமைச்சகம், "ஏ. கோன், ஐபிஎஸ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்க, இந்திய ஜனாதிபதி, 1969 ஆம் ஆண்டு அனைத்திந்திய சேவைகள் (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 3-வது விதியைப் பயன்படுத்தி இருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வேறு எந்த வேலையோ, தொழிலோ செய்யவில்லை என்ற சான்றிதழை வழங்கினால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காலங்களில் அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு அரை ஊதியம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.