’பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் நேற்று (ஜூன் 16ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகியது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பல்வேறு விமர்சனங்களை பெற்ற போதிலும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டை நேபாளில் தடை செய்யப்போவதாக, காத்மாண்டு மேயர் பலேன் மிரட்டினார். அதனை தொடர்ந்து படத்தின் முக்கியமான வசனம் ஒன்றை படக்குழு நீக்கியுள்ளது. 


அப்படி என்ன சர்ச்சைக்குரிய வசனம்..? 


ஆதிபுருஷ் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. அதில், கிருத்தி சனோன் நடித்திருந்த  சீதா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு “சீதா இந்தியாவின் மகள்” என குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து, சீதா தேவியின் பிறந்த இடம் குறித்து தவறாக திரைப்படம் காட்டுவதாகவும், அதை திருத்தவில்லை என்றால், காத்மாண்டு தலைநகருக்குள் எந்த இந்தியப் படமும் திரையிடப்படாது என பெருநகர மேயர் பலேன் ஷா எச்சரித்தார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ”ஆதிபுருஷ் என்ற தென்னிந்திய திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சீதா இந்தியாவின் மகள்’ என்ற வசனத்தை நேபாளம் ஏற்றுகொள்ளாது. சீதா நேபாளத்தில் பிறந்தவர். இதை இந்தியாவில் உண்மையாகாதவரைவில், எந்த ஒரு ஹிந்தி படமும் காத்மாண்டு பெருநகரத்தில் உள்ள திரையரங்குகளில் ஓட அனுமதிக்கப்படாது. இதை சரி செய்ய 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்னை சீதாவுக்கு வாழ்த்துகள்..!” என குறிப்பிட்டு இருந்தார். 






இதை தொடர்ந்து, நேபாளத்தை சேர்ந்த தணிக்கை முழுவும் இதே காரணத்திற்காக ஆதிபுருஷ் படத்தை அனுமதி மறுக்க முடிவு செய்தது. 






சீதா தேவி பிறந்தது எங்கே..? 


இதிகாச வரலாற்றுப்படி சீதா தேவி நேபாளத்தில் பிறந்தவர். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நேபாளத்தின் இன்றைய மாகாணம் எண். 2 ல் அமைந்துள்ள ஜனக்பூர், சீதாவின் பிறப்பிடமாகவும் விவரிக்கப்படுகிறது. அங்குதான் ராமர் வில்லை உடைத்து சீதாவை மணந்தார். 


ஆதிபுருஷ் நேற்று வெளியான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடுவதாக தெரிகிறது. தெலுங்கில் 55 கோடியும், வட இந்தியாவில் சுமார் 30 கோடியும் வசூலிக்க வாய்ப்புள்ளது. 'ஆதிபுருஷ்’ படத்தின் முதல் நாளிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டியதாகவும், இதனால் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் சாதனையை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது. 


இதற்கு முன் ராஜ மௌலியின் ‘ஆர்.ஆர்ஆர்., யாஷின் ‘கேஜிஎப் 2’ பிரபாஸ் நடித்த ‘பாகுபலி 2; ஆகிய படங்கள் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.