பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாகுபலிக்கு பிறகு வெளியான  ‘சாஹோ’ மற்றும்  ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தப்படத்தின் வாயிலாக வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் பிரபாஸ்.  







ஆதிபுருஷ்’ திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் , ராவணனாக சயீஃப் அலி கானும் நடிக்கின்றனர். டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படம் 3டி படமாக எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. பல கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தவே ,அது நெட்டிசன்களின் ட்ரோல்ஸ் மற்றும்  விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.




இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பிரபாஸ் வில் மற்றும் அம்புடன் பறந்துகொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்த வானர சேனா என்னும் அனிமேஷன் ஸ்டூடியோ அது  தங்களின் டிசைன் என கிளைம் செய்துள்ளனர். இது குறித்த ஒப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்த அவர்கள் , அதே டிசைனில் முன்னதாக தாங்கள் உருவாக்கிய சிவனின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். மேலும்  டி சிரீஸ் இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்த வானர் சேனா குழுவினர் “இது மிகப்பெரிய அவமானம் டி சீரிஸ். கலைப்படைப்பை உருவாக்கிய அசல் படைப்பாளருக்கு நீங்கள் கிரிடிட் கொடுத்திருக்க வேண்டும்“ என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


ஆதிபுருஷ் திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.