இந்தியில் வெளியான தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில் ராமாயண கதையைக் தழுவி உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில், பாகுபலி புகழ் பிரபாஸூம், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளனர். 


இந்தப்படத்தின் டீசர் கடந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை வரவேற்பை பெறாமல், கடுமையான விமர்சனங்களை பெற்றது. 


 


                             


குறிப்பாக டீசரில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போல இருப்பதாகவும், சோட்டா பீம் போல இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதுமட்டுமல்லாமல் படத்தில் இந்திய கலாச்சாரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பதிவிடப்பட்ட இப்படியான விமர்சனங்களால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. அந்த நிகழ்விலேயே பிரபாஸ், இயக்குநர் ஓம் ராவத்தை கோபமாக கூப்பிடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 


இந்த நிலையில் படக்குழு சார்பில் டீசரை ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறி, 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மட்டும் டீசர் 3டியில் ஒளிப்பரப்பட்டது. அதைப்பார்த்த ரசிகர்கள் படத்தின் டீசர் நன்றாகவே இருப்பதாக கருத்து தெரிவித்தனர். ஐமேக்ஸ் மற்றும் 3 டி வடிவில் அடுத்த வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தற்போது தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 






இது குறித்து படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், “ ஆதிபுருஷ் வெறும் திரைப்படம் அல்ல. பிரபு ஸ்ரீராமரின் மீதான நமது பக்தி, சமஸ்கிருதம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் பிரதிபலிப்பு. பார்வையாளர்களுக்கு முழுமையான விஷூவல் அனுபவத்தை நாங்கள் அளிக்க விரும்புகிறோம். அதனால் படக்குழு பணிபுரிய அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆகையால் இந்தப்படம் ரிலீஸ் தேதி வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும். இந்தியாவை பெருமை பட செய்யும் படத்தை நாங்கள் எடுக்க நினைக்கிறோம். உங்களது ஆதரவு வேண்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.