விருகம்பாக்கம் அருகே காதலிக்கு பரிசளிக்க விலை உயர்ந்த நாய்க்குட்டியை திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 


சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் வீடுகளின் முன்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் நிறுத்தி இருக்கும் மோட்டார் வாகனங்கள் மற்றும் அதில் இருக்கும் பேட்டரிகள் அடிக்கடி திருடு போய் வந்ததாக விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.


இந்தநிலையில் சாலிகிராமம், அம்பேத்கர் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 45 வயதான சதிஷ்குமார் மற்றும் அவரது மனைவி தில்லைக்கரசி இவர்களது வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர், இந்த நாயானது இரு நாட்களுக்கு முன் மாயமானது. பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காததால் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நாய் வளர்த்த தம்பதி புகார் அளித்தனர். இதன்படி, விருகம்பாக்கம் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த, ஆன்லைன் டெலிவரி ஊழியர் ஒருவர், நாயை தூக்கிச் சென்றது தெரியவந்தது. 


நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் வாலிபர் ஒருவர், டெலிவரி பணி செய்வது போல் வீடுகளை நோட்டமிட்டுள்ளார். காவல்துறையினர் சந்தேகத்தின்படி அவரை பிடித்து விசாரித்த போது, அவர் சாலிகிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சுஜித் என்பதும், தனது அலுவலகத்துக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டரில் சென்று வீடுகளுக்கு முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதில் இருக்கும் பேட்டரிகளை திருடியதும், மேலும் தனது காதலிக்கு விலை உயர்ந்த நாய்க்குட்டியை பரிசாக கொடுக்க விரும்பிய அவர், பேட்டரி திருடச் சென்ற வீட்டில் இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டியையும் திருடியதும் தெரியவந்தது.


இதையடுத்து, அவரிடம் இருந்து 2 மோட்டார் வாகனங்கள், பேட்டரிகள், விலை உயர்ந்த நாய்க்குட்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.