காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேங்கையப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கொண்டு வந்து வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

அரிசி பறிமுதல்..

 

ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில், வாங்கும் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்து வட மாநில தொழிலாளர்களுக்கும், டிபன் கடைகளுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஏழு டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி இருப்பு வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா, கிஷோர் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



 

மற்றொரு சம்பவம்

 

குடியாத்தத்தை அடுத்த வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு வேனும், ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாசியா் என்.வெங்கட்ராமன் மற்றும் குடியாத்தம் நகரப் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அந்த வேனில் இருப்பது தெரிய வந்தது. வேன் ஓட்டுநரும் உடன் இருந்தவரும் தப்பியோடி விட்டனா். காயமடைந்த டிப்பா் லாரி ஓட்டுநா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

 

அரிசியை கடத்துவது ஏன் ?

 

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் கள்ளச் சந்தையில் விற்று விடுவது வழக்கமாக உள்ளது. அதேபோல சில நேரங்களில் நியாய விலை கடையை சேர்ந்த ஊழியர்களும் , கள்ளச் சந்தையில் அரிசி விற்று வருவது, வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற அரிசியை சில இடைத்தரகர்கள் குறிப்பிட்ட விலைக்கு பெற்று, அவற்றை தமிழகத்தில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குறிப்பிட்ட விலையில் விற்று வருவது தொடர் கரையாகியுள்ளது. இதேபோல தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவு ரேஷன் அரிசிகளை , ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு விற்று விடுகிறார்கள். 



 

அவர்கள் அந்த அரிசியை பாலிஷ் செய்து, அரிசி தேவை இருக்கும் மாநிலங்களுக்கு விற்பதும் தொடர்கதை உள்ளது. இதுகுறித்து தமிழக அரசை தொடர்ந்து, கண்காணித்து நடவடிக்கை எடுத்து அவ்வப்பொழுது டன் கணக்கில் அரிசிகளை பறிமுதல் செய்தாலும், இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களில் இருக்கும் அரிசி தேவையை, கருத்தில்கொண்டே இது போன்ற பெரிய குழுக்கள் செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.