திருப்பதி கோயிலில் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ‘ஆதிபுருஷ்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயிப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
கடந்த ஆண்டு ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி கடும் கேலிக்குள்ளானது. அதிலிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமில் வருவது போல இருந்ததால் படக்குழுவும் மேலும் ரூ.100 கோடி செலவு செய்து கிராபிக்ஸ் பணிகளை மேம்படுத்தியது. இதனால் ஜனவரியில் வெளியாகவிருந்த படம் ஜூன் மாதத்திற்கு தள்ளிச் சென்றது. ஆனால் ட்ரெய்லரிலும் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆதிபுருஷ் படத்திற்கு தியேட்டரில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு செய்யும் மரியாதை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்படியான நிலையில் திருப்பதியில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சன்னி சிங் மற்றும் ஓம் ராவத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டி அனைவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், கீர்த்தி சனோன் காரில் கிளம்ப தயாரானார். அப்போது இயக்குநர் ஓம் ராவத்திடம் விடை பெறுவதாக சொல்லிய கீர்த்தியை அவர், கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.