ஒரு காலத்தில் சினிமா பாடல்கள் மட்டுமே ஹிட் அடித்து வந்தது. ஆனால் நல்ல இசை எங்கு இருந்தாலும் கொண்டாட நாங்கள் இருக்கிறோம் என்றது தற்போதைய தொழில்நுட்ப தலைமுறை. இண்டி மியூசிக் , ஆல்பம் சாங்ஸ் என பல்வேறு வகையிலான பாடல்களை ரசிகர்கள் டிரண்டாக்கிய வரலாறுகளும் உண்டு. எனவேதான் பிரபலங்களும் இத்தகைய பாடல்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல பிரபல இசையமைப்பாளர்களும் கூட திரைப்பாடல்கள் அல்லாமல் தனி ஆல்பம் சாங்ஸை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் குக் வித் கோமாளி புகழ் ‘அஸ்வின் ‘ நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் சாங்ஸ் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘அடிபொலி’ என்னும் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன தகவல்கள். இதனை ‘சிவாங்கி’ பாடியுள்ளார்.
சிவாங்கி மற்றும் அஸ்வின் ஜோடியின் காம்போவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ‘அடிபொலி’ என்னும் பாடலை அஸ்வினுக்காக சிவாங்கி பாடியிருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது. மேலும் சிவாங்கியுடன் இணைந்து வினீத் ஸ்ரீனிவாசன் மேல் போர்ஷனை பாடியுள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படுவதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் பாடல் ஹிட் அடிக்கும் என படக்குழுவினர் கருதுக்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாடல் குறித்து பதிவு ஒன்றினை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் " ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கான சிறந்த கொண்டாட்ட பாடல் இது! குழுவினருக்கு வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 7 மணிக்கு THINKMUSIC சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் யூடியூப் பக்கங்களில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஸ்வினுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய டெர்னிங் பாய்ண்டாக அமைந்துவிட்டது. தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது தவிர வலிமை படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் பைக்கில் செல்வது போல இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.முன்னதாக இவர் நடிப்பில் வெளியான “ குட்டி பட்டாஸ்’ என்னும் ஆல்பம் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது, கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களை இது யுடியூப் பக்கத்தில் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.