சமூகம் சார்ந்த விஷயங்களை துணிச்சலாக விமர்சிக்கும் நடிகை விநோதினியின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த ஜூன் மாதம் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில்  25  கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையில் பேக்கிங் செய்யப்படும் அரிசி, பருப்பு, தயிர்  உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்தனர். பலரும் தங்கள் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்தனர். 






அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் கலந்த வேடங்களில் நடித்து வரும் வினோதினி ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது செம வைரலானது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்திய ரூபாயை விட அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டது. இதுகுறித்து பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாக தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்தது. 






அதனையும் விமர்சித்து ஊசிப்போன தேங்காய் சட்னி என்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை அவர் தனது அப்பாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். அதில் அப்பா, நான் போட்ட ஊசிப்போன தேங்காய் சட்னி வீடியோ வைரலாயிட்டு என விநோதினி சொல்கிறார். அதற்கு பின்விளைவுகள் ஏதுவும் இருக்குமா என அவர் கேட்க, என்ன பின்விளைவுகள் என விநோதினி கேள்வியெழுப்புகிறார். 


ரெய்டு அந்த மாதிரி என அப்பா சொல்ல, ஆமா வந்தா என்ன கொடைக்கானல்ல இருக்க காட்டு பங்களாவையா காட்ட முடியும்? எதுக்கும் இந்த செயினை உள்ள தூக்கி போடு என விநோதினி கூறுகிறார். அப்ப உன்னை உள்ளே தூக்கி போட்டுருவானா என அப்பா கேட்க, ஒருவேளை நான் உள்ளே போயிட்டா என்ன பண்ணுவ என விநோதினி கேள்வியெழுப்புகிறார். 


அதற்கு அப்பா 3 மாசமோ, 6 மாசமோ நான் மேனேஜ் பண்ணிக்குவேன் என தெரிவிக்கிறார். உடனே விநோதினி அப்பா நான் அதை கேட்கல என்ன எப்படி வெளியே கொண்டு வருவன்னு கேக்குறேன் என சொல்லிக்கொண்டே தலையில் அடிக்கிறார்.