நடிகை வினோதினி என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இளம் நெஞ்சே வா.. என்ற பாடல் தான். ஆணின் மேல்சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு மேக்கப்பே இல்லாவிட்டாலும் திருத்தமான அழகுடன் பாலுமகேந்திர பட நாயகியாக கணகச்சிதமாக ஃபிரேமில் பொருந்தி காட்சியளிக்கும் முகம் தான்.


வினோதினி நான் மீண்டும் திரையில் தோன்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.


அவரது பேட்டியிலிருந்து:


எனது அம்மா ஒரு நடிகை. அதனால் சிறு வயதிலிருந்தே சூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மாவுடன் செல்வேன். அப்படியே எனக்கு சினிமா மீது ஈர்ப்பு வந்துவிட்டது. முதன்முதலில் விசு சாரின் படங்களில் தான் நான் ஹீரோயினாக நடித்தேன். அதன் பின்னர் மணிரத்னம் சாரின் நாயகன் படத்தில் கமல் சாரின் சிறுவயது மகள் வேடத்தின் நடித்திருந்தேன். அந்தப் படத்திற்குப் பின்னர் நான் மணி சாரை நேரில் பார்க்கவே இல்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் அவரைப் பார்த்து, சார் நான் உங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். நினைவுள்ளதா என்று கேட்க வேண்டும் என ஆசை. அவ்வப்போது இதை சுஹாசினி மேடத்தை சந்திக்கும் போதெல்லாம் சொல்வேன். அதன் பின்னர் முதன்முதலில் நான் ஹீரோயினாக நடித்த படம் ஆத்தா உன் கோயிலியே. அந்தப் படத்தில் என்னை கஸ்தூரி ராஜா சார் தான் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் ஹிட் அடித்தது. அதைப் பார்த்துதான் என்னை வண்ண வண்ண பூக்கள் படத்தில் பாலுமகேந்திரா சார் நடிக்க வைத்தார்.


அந்தத் திரைப்படத்தின் மூலம் நான் நடிப்பில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். பாலு மகேந்திரா சார் எனக்கு தந்தை மாதிரி. அந்தப் படம் எனக்கு தேசிய அளவில் பெயர் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் பல படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தபோது திருமணம் நடந்தது.




திருமணத்திற்குப் பின் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழல் உருவானது. இந்தியப் பெண்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. நானும் என் நடிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் ஐக்கியமாகிவிட்டேன். இப்போது எனது பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். அவர்களே அம்மா நீ ஏன் உனக்குப் பிடித்த நடிப்பைத் தொடரக் கூடாது எனக் கேட்கிறார்கள்.


அதனால் நானும் உங்களை திரையில் சந்திக்கத் தயாராகிவிட்டேன். நான் நடிப்புக்கு லீவு விட்டிருந்த இத்தனை நாட்களில் சினிமா வேகமாக வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் பல மாயாஜாலம் செய்கிறது. ஓடிடி மூலம் சினிமா நம் வீட்டுத் திரையில் லைவ் ஸ்ட்ரீம் ஆகிறது. வெப் சீரிஸுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், வெப் சீரிஸில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கிளம்பியுள்ளது. பலரிடமும் கதை கேட்டுள்ளேன். விரைவில் உங்களை திரையில் சந்திப்பேன்” இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.