வித்யா பாலன்


கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன் (Vidya Balan), இயக்குநர் மணிரத்னம் இயக்கிய குரு, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர்.


நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ’ The Dirty Picture'  திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன்.  தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ரன் படத்தில் நடிக்க இருந்தார் வித்யா பாலன். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து  அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்தியில் ஷாஹித் கபூருடன் இணைந்து கிஸ்மத் கனெக்‌ஷன் என்கிற படத்தில் நடித்த அவர் ஷாஹித் கபூரை காதலித்து வந்ததாக கிசுகிசுப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.


மம்மூட்டியை புகழ்ந்த வித்யா பாலன்


சினிமாவில் பல்வேறு சவால்களையும் தன் மீது வைக்கப் பட்ட விமர்சனங்களையும் துணிச்சலாக எதிர்கொள்பவர் வித்யா பாலன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது திரை அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியையும் (Mammootty) பாலிவுட்டின் பிரபல நடிகர்களாக ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் ஆமீர் கான் உள்ளிட்ட நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


இந்த நிகழ்வில் அவர் “கடந்த ஆண்டு மம்மூட்டி நடித்து வெளியான ‘காதல் தி கோர்’ படத்தைப் பார்த்தேன். படம் பார்த்து முடித்ததும் அவரது மகன் துல்கர் சல்மானிடம் மம்மூட்டிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி சொன்னேன். மாற்றுப்பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். கேரளாவில் கல்வி கற்றவர்களின் விகிதாச்சாரம் அதிகம் இருப்பதால் கேரளத்தில் இந்த மாதிரியான படங்கள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


மம்மூட்டியின் முயற்சியை நான் குறையாக சொல்லவில்லை. ஆனால் அவர் இப்படியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகம் இருக்கின்றன. மம்மூட்டியைத் தவிர இன்று பாலிவுட்டின் கான் நடிகர்கள் தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று, ஆனால் ஆயுஷ்மான் குர்ரானா போன்ற நடிகர்கள் இந்த மாதிரியான கதாபாத்திரங்களை துணிச்சலாக ஏற்று நடிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.


மேலும் படிக்க:


Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!