நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவுடனான தனக்கிருந்த நட்பு பற்றி நடிகை வனிதா விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரம்பரியமிக்க சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் வனிதா விஜயகுமார். இவரது அப்பா விஜயகுமார், அம்மா மறைந்த நடிகை மஞ்சுளா, சகோதரான அருண் விஜய், சகோதரிகளாக ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி, கவிதா என பலரும் சினிமாவில் நடித்துள்ளனர். வனிதாவுக்கு அடையாளமே தேவையில்லை என்னும் அளவுக்கு தன்னுடைய வெளிப்படையான, தைரியமான பேச்சுகளால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இவரின் ரசிகர் பலம் எகிறியது. தொடர்ந்து தனது மகளான ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள செய்தார். இப்படியான நிலையில் வனிதா விஜயகுமார் அளித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் பேசும் அவர், “பிரபுதேவாவை காதலிக்கவில்லை என்றால் நான் கண்டிப்பாக சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது. லவ் பண்ணா அவரை தான் பண்ண வேண்டும் என நான் முடிவே பண்ணிவிட்டேன். அப்போது என்னுடைய அப்பா விஜயகுமார் ராசையா படம் பண்ணிக் கொண்டிருந்தார். அந்த படத்தில் பிரபுதேவா தான் ஹீரோ. என்னோட நிலைமையை பார்த்து இந்த பொண்ணை விட்டால் வேலைக்கு ஆகாது என சொல்லி அவரை வீட்டுக்கு வர சொல்லி விட்டார். அப்போது வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது.
எங்க அக்கா கவிதா அங்கு இருந்தார். அவர் சரத்குமார் நடித்த கூலி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். கவிதா எனக்கு ரொம்ப நெருக்கமானவர். அவரிடம் ஒரு கேமரா இருந்தது. அப்போதெல்லாம் ஒருவரிடம் கேமரா இருப்பதே பெரிய விஷயமாக இருந்தது. பிரபுதேவா வந்து விட்டு கிளம்பும்போது ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டேன். சரி வாங்க என அவர் சொன்னார். கவிதா கேமராவை கிளிக் செய்தவுடன் அதில் ரோல் சுற்றும் சத்தம் கேட்டது. எனக்கு ஒன்றுமே புரியாமல் அக்காவை பார்க்கிறேன். அவர் போட்டோ எடுத்தாச்சு என தம்ப்ஸ் அப் காட்டுகிறார்.
நான் அந்த ஒரு போட்டோவுக்காக நைட்டு எல்லாம் வெயிட் பண்ணேன். காலையில போய் பிரிண்ட் போடலாம்ன்னு கடைக்கு போயிட்டு வந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் நான் மட்டும் தான் இருந்தேன். பிரபுதேவாவின் தலை கட்டாகி இருந்தது. இதனைப் பார்த்து ஏய் கவிதா என அக்காமேல் கொலைவெறி தான் வந்தது” என வேடிக்கையான சம்பவத்தை வனிதா விஜயகுமார் பகிர்ந்திருப்பார்.