நடிகை வனிதா விஜயகுமார் எழுதி , தயாரித்து , இயக்கியுள்ள மிஸஸ் & மிஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
வனிதா பற்றி நடிகை அம்பிகா
நடிகை அம்பிகா பேசுகையில், ''இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். அந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான். இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். பொழுதுபோக்காக இருக்கிறது. இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிட கடினம் . அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்கு சென்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நள்ளிரவு போஸ்டர் ஒட்டிய வனிதா
நடிகை ஃபாத்திமா பாபு பேசுகையில், ''நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றத்தார்களும் நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் ஒரு நபர். அவருடைய இந்த எண்ணம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர் தன்னை பற்றி எத்தனை விதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனை தனது இடது கையால் புறம் தள்ளிவிட்டு, அதனையே தன்னுடைய முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாற்றிக் கொண்டு உயர்ந்து கொண்டே போகும் அவருடைய அணுகுமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது.
இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்பதற்கு வனிதா மிகச்சிறந்த முன்னுதாரணம். இந்த விஷயத்தை நான் வனிதாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன்.
இந்த படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியை கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா. இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
ஷகிலாவை இந்த படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறமையை வனிதா இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.