BJP Brij Bhushan: ப்ரிஜ் பூஷனிற்கு எதிராக தனது மகள் பொய் புகார் அளித்ததாக, அவரது தந்தையே வாக்குமூலம் அளித்துள்ளார்.

ப்ரிஜ் பூஷன் - போக்சோ வழக்கு ரத்து:

பாஜக முன்னாள் எம்பி மற்றும் மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரான ப்ரிஜ் பூஷன் சிங் மீது, மைனர் ஆக இருந்த மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவுகளை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைத்தது. அதனடிப்படையில் ப்ரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டு தொடர்பான எந்தவித ஆதாரங்களும் இல்லாததால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய போக்சோ பிரிவு வழக்கில் இருந்து அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகார்தாரர் ஒப்புதல்:

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கேமரா வாயிலாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான புகாரளித்த பெண், காவல்துறையின் விசாரணை முடிவுகளை தான் ஏற்பதாகவும், வழக்கு விசாரணையை தொடர தனக்கு விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டார். இதனிடையே, புகாரளித்த பெண்ணின் தந்தையிடம் நடத்திய விசாரணையின் போது, தனது மகள் அளித்த தகவல்களின் பேரில் ப்ரிஜ் பூஷன் சிங் மீது பொய்யான புகார்களை அளித்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை கைவிட காவல்துறை நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது.

எதிர்க்கட்சிகள் சாடல்:

ப்ரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாஜக தனது அதிகார பலத்தை பயன்படுத்தி புகார் அளித்தவர்களை மிரட்டி, குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறச் செய்துள்ளது என சாடி வருகின்றனர். இதுதான் பிரதமர் மோடி நடத்தும் பெண்களுக்கான அரசா? என கேள்வி எழுப்புகின்றனர். மறுமுனையில் ப்ரிஜ் பூஷன் சிங்கின் மீது அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய்யானைவை என சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் திட்டமிடப்பட்ட பரப்புரை தற்போது அம்பலமாகியுள்ளது என பாஜகவினர் பேசி வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்:

மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தபோது ப்ரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பல முன்னணி வீரர், வீராங்கனைகள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்கள் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்களது சர்வதேச பதங்களை கங்கையில் வீசுவதாகவும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். ஆனாலும், பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசவே இல்லை. அதேநேரம், அமைச்சரவை மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் தான், ப்ரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், ப்ரிஜ் பூஷன் சிங் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்க மறுத்தது. ஆனால், அவரது மகனை வேட்பாளராக பாஜக அறிவித்து வெற்றி பெற செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் மற்ற வழக்குகள்:

போக்சோ வழக்குகள் ரத்து செய்யப்பட்டாலும், 6 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரிலான பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகளை ப்ரிஷ் பூஷன் சிங் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்குகளில் ப்ரிஜ் பூஷன் மட்டுமின்றி, மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் துணைச் செயலாளர் வினோத் தோமரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 41A இன் கீழ் விசாரணைத் தேவைகளுக்கு இணங்கியதாக காவல்துறை குறிப்பிட்டதால், விசாரணையை கைது செய்யாமல் தொடர நீதிமன்றம் அனுமதித்தது.