வனிதா விஜயகுமார்


தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar). பெரும் வரவேற்புடன் சினிமாவுக்குள் வந்த வனிதா விஜயகுமார்  நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் சினிமாவில் எப்போது கவனம் பெற்று வரும் ஒரு பிரபலம். பிக்பாஸ், குக்கு வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைத் திரட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் என்னடா இவங்க என்று முகம் சுளித்த ரசிகர்கள், நாட்கள் செல்ல செல்ல வனிதாவின் துணிச்சலான கருத்துக்களையும் அவரது எதிராளிகளுக்கு கொடுக்கும் சாட்டையடி பதில்களாலும் வனிதாவின் பெயரில் ரசிகர் படையையே தொடங்கி விட்டார்கள். தற்போது வனிதா சொந்தமாக யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார். 


தனிப்பட்ட வாழ்க்கை


கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. பின் 2007ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் ஆனந்த் ஜெயராஜன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஐந்து ஆண்டுகள் நீடித்த இந்தத் திருமணம் கடந்த 2005ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே அவரைப் பிரிந்தார். இதற்கு முன்னதாக  நடனக் கலைஞரான ராபர்ட் மாஸ்டர் உடன் வனிதா காதல் உறவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் அடிக்கடி வெளியாகி வந்தன. இப்படியான நிலையில் இருவரும் காதல் உறவில் இருந்து வெளிவந்து பல கருத்து வேறுபாடுகளுக்குப் பின் நல்ல நண்பர்களாக பழகி வந்தார்கள். 


திரையில் ரொமான்ஸ்






முன்னதாக ராபர்ட் மாஸ்டர் நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்கிற படத்தில் வனிதா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இருவரும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். “மிஸ்டர் & மிசஸ்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இருவரும் இணைந்து ஹீரோ ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்கள். இவர்களுடன் பிரேம்ஜியும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த சில தினங்கள் முன்பாக இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படியான நிலையில் இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடிக்கும் இப்படத்தில் இருவருக்குமான ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.