அநீதி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜூலை 21 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனிடையே அநீதி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், நான் என்னுடைய கம்பேக்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஆனால் அநீதி படம் முதல் படமாக உலகளவில் ரிலீஸ் ஆகுது. இவ்வளவு பெரிய இயக்குநர் எனக்கு போன் செய்து, ‘நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். கதை எழுதும் போதும் இந்த கேரக்டரை நீங்க பண்ணா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி’ என சொன்னார். உடனே நான் சரி என சொன்னேன். இப்படி எளிமையாக ஒரு பிரபலத்தோட பேசுற இயக்குநர் ஒரு சிலர் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.அர்ஜூன் தாஸூக்கே நான் வில்லன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் க்யூட்டெஸ்ட் பெர்சன். அவரோட வாய்ஸ் அழகாக உள்ளது.
கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து விட்டு, எனக்கு ஓ மை காட் .. எனக்கு ஷாரூக்கான் நியாபகம் தான் வந்தது. அர்ஜூன் தாஸ் தமிழ் சினிமாவின் ஷாரூக்கான். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என தெரிவித்தார்.