வடிவுக்கரசி


சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி, பின் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மூத்த நடிகையாக வருபவர் நடிகை வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.


பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவர்  நடித்த நெகட்டிவ் ரோல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. எந்த ஒரு ஆண் வில்லனுக்கு நிகராகவும் இவரது கதாபாத்திரங்கள் நம்மை மிரள வைத்திருக்கின்றன. ஆனால் அப்படி அவர் வில்லியாக வடிவுக்கரசி நடித்த ஒரு படம், அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


அருணாச்சலம் படத்தால் நடந்த விபரீதம்


ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத், வீரா, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. அருணாச்சலம் படத்தில் கூன் விழுந்த 85 வயது கிழவியாக பார்வையிலேயே மிரள வைக்கும் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்தை வெறுத்து ஒதுக்கும் ஒரு கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது.


இந்நிலையில் முன்னதாக தனியார் ஊடகத்துக்கு தான் அளித்த நேர்க்காணலில் பேசிய வடிவுக்கரசி, அருணாச்சலம் படத்தின்போது தனக்கு நிகழ்ந்த தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.  


கைதட்டி பாராட்டி ரஜினிகாந்த்


”அருணாச்சலம் படத்தில் நான் படியில் இறங்கியபடியே ரஜினியை பார்த்து ஒரு வசனம் பேச வேண்டும். 85 வயது கிழவி என்பதால் என்னுடைய தலையும் நடுங்க வேண்டும், அதே போல் நான் கையில் வைத்திருக்கும் கோலும் நடுங்கியபடி இந்த வசனத்தை பேச வேண்டும். இதற்கு முன்பாக படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன் என்னிடம் வந்து வசனத்தை சொன்னார்.


‘அனாதைப் பயலே’ என்று நான் ரஜினியை பார்த்து சொல்ல வேண்டும் என்று அவர் சொன்னதும், நான் அதிர்ந்து போய் யாரை ரஜினியவா என்று கேட்டேன். “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, அது அனுமதிக்கப்பட்ட வசனம் தான்” என்று அவர் என்னிடம் சொன்னார். நான் “அது இல்லை சூப்பர் ஸ்டாரைப் பார்த்து எப்படி அப்படி சொல்வது?” என்று தயங்கினேன். அதற்கு அவர் “அதெல்லாம் அவர் ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டார்” என்று என்னை வசனம் பேசச் சொன்னார்.


அதன் பிறகு நான் படிகளில் இறங்கியபடியே ’அனாதைப் பயலே’ என்று வசனத்தை பேசி முடித்தேன். பேசி முடித்ததும் என்னுடைய கைகள்  நடுங்கத் தொடங்கின. ஆனால் நான் பேசி முடித்த அடுத்த நொடி ஓரத்தில் இருந்து சத்தமாக கைத்தட்டல் கேட்டது. திரும்பி பார்த்தபோது ரஜினிகாந்த் கைதட்டிக் கொண்டிருந்தார். அவர் கைதட்டியதும் செட்டில் இருந்த அத்தனை பேரும் கைதட்டத் தொடங்கினார்கள்.


ரஜினிகாந்த் என்னிடம் வந்து என் தோளைப் பிடித்து “எப்படி இவ்வளவு எதார்த்தமா நடிக்கிறீங்க?” என்று கேட்டார். நான் “அது இல்லை.. அந்த வசனம்” என்று தயங்கினேன். “வசனம் எல்லாம் பிரச்சனை இல்லை.. எப்படி இவ்வளவு அருமையா நடிக்கிறீங்க?” என்று ரஜினி கேட்டார். மனோரமா ஆச்சி, கவுண்டமணி ஆகியவர்கள் சிங்கிள் ஷாட்டில் நடிக்கும்போது மக்கள் கைதட்டி பாராட்டுவதைப் பார்த்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்று நான் ஏங்கி இருக்கிறேன். ஆனால் எனக்கு மக்களின் பாராட்டைவிட சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாராட்டு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்” என்று கூறினார்.


ரயிலை மறித்து மன்னிப்பு கேட்கவைத்த ரசிகரகள்




ரஜினியிடம் பாராட்டுக்களைப் பெற்ற வடிவுக்கரசிக்கு அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு அனுபவத்தை ரஜினி ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து பேசிய வடிவுக்கரசி  “அதன் பிறகு படம் வெளிவந்த பின் ஒருநாள் திண்டுக்கல்லில் இருந்து சென்னை திரும்ப காலை 11 மணி ரயிலில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் டிடிஆர் வந்து என்னை கொஞ்சம் வெளியே வரச் சொன்னார். ஒருவேளை சீட் நம்பர் மாறி ஏறிவிட்டேனா என்கிற குழப்பத்தில் நான் அவருடன் சென்றேன்.


டிடிஆரிடம் கேட்டபோது அவர் “வெளியே ரஜினி ரசிகர்கள் எல்லாம் நிக்குறாங்க, நீங்க அவரை ஏதோ திட்டினீங்களாம், அவங்ககிட்ட வந்து மன்னிப்பு கேட்கனும்னு சொல்றாங்க” என்றார். நான் வெளியே சென்று பார்த்தபோது பெரிய கும்பல் நின்றிருந்தது. நான் பேசியது வசனம் என்று சொல்லி புரியவைக்க முயற்சித்தேன் .ஆனால் அதைக் கேட்கும் நிலை யாரும் இல்லை. 


நான் டிடிஆர் பின்னால் நின்றபடி அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். என் வாய் சும்மா இல்லாமல் “ரகுவரன் மட்டும் ரஜினியை திட்டுகிறார், அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கச் சொல்லாமல் என்னை மட்டும் கேட்க சொல்கிறீர்கள்” என்றுவிட்டேன். “அதுதான் அவரை தலைவர் போட்டுத் தாக்குவாரே” என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது. சரி என்று சமாளித்துவிட்டு நான் உள்ளே வந்தேன், நான் மன்னிப்பு கேட்டபின் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் எழுந்து வழிவிட்டார்கள். இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்று அவர் கூறினார்.


சிவாஜியில் சாந்தமான ரசிகர்கள்




இந்த சம்பத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினி தாயாக நடித்தார் வடிவுக்கரசி. அருணாச்சலம் படத்தில் ரஜினியை திட்டியதற்காக ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த கோபம் இந்த படத்திற்கு பிறகு கொஞ்சம் தணிந்தது என்று சொல்லலாம்.