தேர்வுகள் வந்தாலே சில வழக்கமான நடைமுறைகளையும் மாற்றிவிடுகிறோம்.


நண்பர்களுடன் அரட்டையை நிறுத்திவிடுவது, செல்போனில் நண்பர்களின் நம்பரை பிளாக் செய்து விடுவது, தனியறைக்குள் உட்கார்ந்து படிப்பது என்று ஒரு கடுமையான விரதக் காலமாக பல பேருக்கு இந்த தேர்வுக் காலம் அமைந்து விடுகிறது. சூழலை இத்தனை கடுமையாக நீங்கள் மாற்றிக்கொள்ளக் கூடாது.‌  ஏனென்றால் தேர்வு என்பது போர்க்களம் இல்லை.  அது பூக்கள் விளையாடும் நந்தவனம்!


என்ன செய்யலாம்? கூடாது?


தேர்வை மன மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்.‌ இன்னதென்று அறியாத பயத்துடன் அணுகக் கூடாது.‌ இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால்தான் கவுரவமாக இருக்கும் என்று நீங்களே ஏதாவது தேவையில்லாத இலக்குகளை வைத்துக் கொள்ளாதீர்கள். ஓர் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம், உங்கள் கிரியேட்டிவிட்டியை பாதிக்கும்.‌


ஓரளவு படித்தாலே வெற்றி


ஒரு முக்கியமான விஷயம்.  இதுவரை சரியாகப் படிக்கவில்லை.‌ நம்மால் தேர்வை சரியாக எழுத முடியுமா என்று பயந்து கொண்டு தேர்வில் இருந்து விலகி நிற்காதீர்கள்.‌ ஏனென்றால் ஓரளவு படித்து இருந்தால் நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று விட முடியும்.


முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களைப் பகுப்பாய்வு செய்து பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியும்.‌ அனைத்து பாடங்களிலும் உங்கள் கேள்வி ஞானத்தை வைத்தே தேர்ச்சி பெறக்கூடிய அளவில் பல கேள்விகள் இருக்கின்றன.  உதாரணத்திற்கு 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு 20 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்வில் கிடைக்கும்.


அக மதிப்பீட்டில் 10 மதிப்பெண்கள் கிடைக்கும். 70 மதிப்பெண்களுக்கு மட்டுமே நீங்கள் தேர்வு எழுத வேண்டும்.‌ இந்த 70 மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் தேர்ச்சி பெற்று விடலாம்.‌ இந்த 15 மதிப்பெண்களை, இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட ஆறு, ஏழாம் வகுப்பு முதல் படித்த விஷயங்களைக் கொண்டு எழுதி விட முடியும்.  நீங்கள் சொந்தமாக விடையளிக்கக் கூடிய வகையிலேயே கேள்விகள் அமைந்திருக்கின்றன.


நான் சொன்ன இயற்பியல் பாடத்தில் சில கேள்விகளை பாருங்கள். .‌


மின் தடை வரையறு


இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?


ஒளிமின் விளைவு விதிகள் யாவை?


காந்தவியல் லாரன்ஸ் விசை பற்றி கூறுக.


நிற மாலை என்றால் என்ன?


இந்த வகையில் சில கேள்விகள் அமைந்திருக்கின்றன இது போன்ற கேள்விகளுக்கு நீங்கள் சொந்தமாகவே விடை அளித்து விட முடியும்.‌ எனவே உங்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 15 எளிமையாக கிடைத்துவிடும்.‌


கணிதத் தேர்வை எப்படி எதிர்கொள்வது?


சரி கணிதத் தேர்வை எப்படி எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம். இதற்கு பத்தாம் வகுப்பு பாடத்தைப் பார்ப்போம். ஒரு மதிப்பெண் வினாக்கள், இரண்டு மதிப்பெண் வினாக்கள், ஐந்து மதிப்பெண் வினாக்கள் உட்பட மொத்தம் 44 கேள்விகள் இருக்கின்றன.‌ இதில் 14 கேள்விகள் கொள்குறி வகை வினாக்கள். இதில் ஒரு மதிப்பெண் வினாக்களில் குறைந்தபட்சம் நீங்கள் ஐந்து மதிப்பெண்கள் எடுத்து விடலாம்


மீதியுள்ள 30 வினாக்களில் என்ன கொடுக்கப்பட்டுள்ளது (given) என்ற படிநிலை எழுதி..  என்ன கேட்கப்பட்டுள்ளது.. என்பதை எழுதினால் கூட ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண்கள் கிடைக்கும்.  இந்த வகையில் 30 மதிப்பெண்கள் கிடைத்து விடும்.


இப்படி உங்கள் மன தைரியத்தையும் புத்தி கூர்மையையும் கொண்டே நீங்கள் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுவிட முடியும். நிலைமை இப்படி இருக்க தேர்வு கடினமானது என்று பயப்படத் தேவையில்லை.‌ தேர்வு எழுதாமல் விட்டு விடக் கூடாது.



ம்


முழு மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு படிப்பவர்கள்,  இதுவரை நடந்த தேர்வுகளில் எந்த மாதிரியான தவறுகள் செய்திருக்கிறோம் என்று பார்த்து அதை திருத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு பாடத்தில் எந்தெந்த பகுதிகளில் மதிப்பெண் குறைகிறதோ அந்த பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படித்துக் கொள்ள வேண்டும்.‌ (வரலாறு படத்தில் ஆண்டுகளை நினைவு வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கிறது என்றால் உங்கள் பாடத்திட்டத்தில் இருக்கக்கூடிய வரலாற்று நிகழ்வுகளை காலவரிசைப்படி இரண்டு அல்லது மூன்று முறை எழுதிப் பாருங்கள்)


கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று எப்போதும் ஆசிரியர்கள் சொல்லி வந்தாலும் திடீரென்று தேர்வில் நாம் நம் கையெழுத்தை மாற்றி விட முடியாது.‌ எழுதுவதை தெளிவாக இடைவெளி விட்டு, அடித்தல் - திருத்தல் இல்லாமல் எழுதினால் போதுமானது.‌


கேள்வியை விடையின் தலைப்பாக மாற்றி எழுத வேண்டும்.‌ இது திருத்துபவர்களுக்கு எளிமையாக இருக்கும்.‌


உதாரணமாக, நன்மை செய்யும் பாக்டீரியாக்களை பற்றி விவரி.. என்ற கேள்வியை


'நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்: '


என்று தலைப்பாக மாற்றி எழுத வேண்டும்.‌ விரிவான விடை எழுதும் பகுதிக்கு துணைத் தலைப்புகள் மிகவும் அவசியம்.  கணக்கீடுகளைப் பொறுத்தவரை வரிசைக்கிரமமாகவும் ஒன்றன் கீழ் ஒன்றாக விடைகள் வர வேண்டும்.‌ அதற்குரிய ரஃப் ஒர்க்குகளை வலது பக்கத்தில் மார்ஜின் போட்டு செய்யுங்கள்.‌ வேதியியல் சமன்பாடுகள், பிளஸ் மைனஸ், குறியீடுகள் தெளிவாக இருக்க வேண்டும்.


இரு முறை வாசியுங்கள்


கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை வாசித்து பாருங்கள்.‌ கடினமாக தோன்றும் கேள்விகள் நீங்கள் படித்த கேள்வியாகவே இருக்கலாம்.  கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும்.‌ எழுதி முடித்த பின் ஏதேனும் விடுபட்டு போயிருக்கிறதா?  என்று பாருங்கள்.‌ ஒரு மதிப்பெண் வினா விடைகளை கடைசியில் எழுதிக் கொள்ளலாம் என்று பல மாணவர்கள் நினைத்து கடைசியில் மறந்து விட்டு வந்து விடுகிறார்கள்.‌ ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தொடக்கத்திலேயே விடை எழுதி விடுவது நல்லது..


தேர்வறையில் என்ன செய்ய வேண்டும்?


* தேர்வு அறை ஒழுக்கம் மிகவும் அவசியமானது.‌ நண்பனுக்கு உதவி செய்யப்போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்.


* தேர்வுத்தாளில் திருத்துபவர்களுக்கு குறிப்புகள் ஏதும் எழுதி வைக்கக் கூடாது.


* தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் கவனத்தைக் கவர வேண்டும் என்று விளையாட்டுத்தனமாக சில மாணவர்கள் நடந்துகொள்கிறார்கள்.‌ அது உங்களை தேர்வில் இருந்து கவனத்தை திசை திருப்பி மதிப்பெண் குறைவுக்கு வழிவகுக்கும்.


தேர்வுக்கு முன்பாக


நண்பர்களுக்கு அடிக்கடி போன் செய்தோ, மெசேஜ் அனுப்பியோ என்ன படிக்கிறாய்? உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு சமயத்தில் ஐபிஎல் சீசனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.‌ உங்கள் கிரிக்கெட் ஆர்வத்தை ஏப்ரல் எட்டாம் தேதி வரை நிறுத்தி வைத்து விடுங்கள்.  அதற்கு பிறகும் மேட்ச் நடக்கும். தேர்வுக்கு முந்தைய நாள் நல்ல உறக்கம் அவசியம்.‌ விடிய விடியப் படிக்காதீர்கள்.


உங்கள் தேர்வு அட்டவணையை ஒருமுறைக்கு இருமுறை பார்த்து தேர்வு நாட்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் உங்கள் மேற்படிப்புக்கு உதவும்.‌ சில வேலைகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்களாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


மேற்படிப்புக்கான ஆலோசனை


தேர்வுகள் முடிந்த பிறகு மேற்படிப்புக்கான ஆலோசனையை குடும்பத்தோடும் ஆசிரியரோடும் இணைந்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்து விடுங்கள். யோசித்துக் கொண்டே இருக்காமல் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து விடுங்கள்.‌ விண்ணப்ப தேதி முடிந்த பிறகு ஏதும் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


- ஆதலையூர் சூரியகுமார், 


அரசுப் பள்ளி ஆசிரியர்/ கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர்.