இந்தியில் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு கேரளா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்த்து. அந்த வகையில் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஷோபிதா துலிபாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பின்னணியில் பாடல் ஓட முன்னால் இருப்பவர் சொல்லும் வார்த்தையை சரியாக கேட்டு பின்னால் இருப்பவருக்கு கடத்த வேண்டும் என்ற டாஸ்க் இடம் பெற்றது.
இதில் முன்னால் இருந்த ஷோபிதா ”குர்தா” என்ற வார்த்தையை சொல்ல அதை த்ரிஷா பின்னால் இருந்த விக்ரமுக்கு சொல்ல முயன்றார். ஆனால் த்ரிஷாவின் உதட்டசைவு ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதைக் கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகியுள்ளது.