புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று உடனடியாக பணிக்கு திரும்புகின்றனர். மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டது. புதுவை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதையடுத்து மின் பழுது நீக்குதல், கட்டண வசூல், அளவீடு கணக்கெடுப்பு போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் திடீர் வெட்டு ஏற்பட்டதால் அனைத்து பொதுமக்கள், விவசாயிகள், தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகினர்.
இதை கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல், தீப்பந்தம் ஏந்தி தலைமை செயலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் குதித்தனர். மற்றொரு பக்கம் அரசை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராடினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து நள்ளிரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலமே இருளில் மூழ்கியது. பொதுமக்கள் கொந்தளித்து மறியலில் ஈடுபட்டதால் எங்கு பார்த்தாலும் போராட்ட களமானது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அதிரடியாக களத்தில் இறங்கி மின்வெட்டை சீரமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி ஒவ்வொரு பகுதியாக நள்ளிரவு 12 மணி வரை மின் வினியோகம் சீரானது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த பிரச்சினைக்கு முடிவு என்ன தான் என்று கேள்வி எழுப்பிய நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே சென்னையில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவம் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பிறகும் மின் தலைமை அலுவலகத்தில் போராடிய மின் ஊழியர்கள் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மற்ற ஊழியர்கள் 6-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலாளர் அருண் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மின் ஊழியர்கள் போராட்டம் குறித்தும், அதனால் ஏற்படும் அசாதாரண சூழல் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எஸ்மா சட்டத்தை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அதற்கான கோப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் தேவை என்பதால் அதுபற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன்பின் முதலமைச்சர் ரங்கசாமி, மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலாளர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பிலும், மின்துறை ஊழியர்கள் தரப்பிலும் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி மின்துறை ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று உடனே பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:- மின்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மின்துறை ஊழியர்கள் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதனை பரிசீலித்து, ஆலோசனை செய்து முடிவுகளை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மின்துறை போராட்ட குழு நிர்வாகிகள் தங்கள் நிர்வாகிகளுடன் பேசி முடிவுகளை அறிவிப்பதாக கூறி விட்டு சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளது. ஒரு சில அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போது அதில் 49 சதவீதம் பங்குகள் அரசிடமும், 51 சதவீதம் பங்குகள் தனியாரிடமும் உள்ளது.
இதேபோல் புதுவை மின்துறையை தனியார் மயமாக்கும் விவகாரத்திலும் கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சினையில் சண்டிகரில் தொடரப்பட்ட வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த முடிவு வரும் வரை தனியார்மயத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை அரசு ஆலோசித்து, பரிசீலனை செய்து முடிவை அறிவிக்கும். அதுவரை நீங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும், மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார்மய டெண்டருக்கு நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை காலம் உள்ளது. அதற்குள் பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதலோடு தான் நாம் எதையும் செய்ய முடியும். மின்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து ஊழியர்கள் மத்தியில் மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் அருள்மொழி கூறியதாவது:- மின்துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது நாங்கள், மின்துறை தனியார்மய டெண்டரை நிறுத்தி வைத்து அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனை பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பி மாற்றங்கள் செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். கடந்த முறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டது. ஆனால் இந்தமுறை முதலமைச்சரே தலையிட்டு பேசினார்.
தனியார்மயம் தொடர்பான வழக்கு கோர்ட்டு நிலுவையில் உள்ளது. அதுதொடர்பான தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் இருந்து 4 கருத்துக்கள் தெரிவிக்கப்பட உள்ளது. இதில் எது முதலில் வந்தாலும் அதன்படி முடிவு செய்து கொள்ளலாம் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதை ஏற்று தீபாவளி வரை இந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பது எனவும் அதன்பிறகும் இதில் தொய்வு ஏற்பட்டால் அப்போது போராட்டத்தை தொடருவோம். கைதான ஊழியர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் அனைவரும் உடனே பணிக்கு திரும்புங்கள் என கூறினர்.