நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்து வெளியாகவுள்ள “ராங்கி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷா சமீபத்தில் திரைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடிய நிலையில், த்ரிஷா நடிப்பில் இந்தாண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. இதில் அவர் குந்தவை கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 


தமிழ்,தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா, கடந்த சில வருடங்களாக ஹீரோயினை மையப்படுத்திய கதைக்களத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு அவர் நடிப்பில் பரமபதம் விளையாட்டு படம் வெளியானது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் அடுத்ததாக த்ரிஷா நடிப்பில் “ராங்கி” படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 






எங்கேயும் எப்போதும் , இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கிய சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரபல இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.   சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து 30 காட்சிகளை அண்மையில் தணிக்கைக்குழு நீக்கியது. மேலும் இந்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக்குழுவினரால் கட் மற்றும் மியூட் செய்யப்பட்ட காட்சிகளால் படத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இயக்குநர் சரவணன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் தற்போது ராங்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் ஆக்‌ஷன் காட்சியில் த்ரிஷா மிரட்டியுள்ளார். பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது என மிரட்டலான வசனத்துடன் அவர் அறிமுகமாகும் காட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. குடும்பத்தில் நடக்கும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அது எப்படி சர்வதேச பிரச்சினைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது.  அதனை த்ரிஷா எப்படி முறியடிக்கிறார் என்பதே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.