தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு தான் பட்ட கஷ்டத்தை நடிகை ஸ்வாசிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

Continues below advertisement

2009ம் ஆண்டு வைகை படம் மூலம் அறிமுகமானாலும் 2024ம் ஆண்டு வெளியான ரப்பர் பந்து படம் மூலம் அனைவரிடத்திலும் பரீட்சையமானவர் ஸ்வாசிகா. தொடர்ந்து மாமன், ரெட்ரோ, கருப்பு, நூறுசாமி என அடுத்தடுத்து தன் நடிப்புக்கு பாராட்டு சேர்க்கும் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் படம் நடித்திருக்கிறார். ஸ்வாசிகா ஒரு நேர்காணலில் சினிமாவில் அறிமுகமான புதிதில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். 

அதில் பேசும்போது, “அப்புச்சி கிராமம் படம் எல்லாருக்கும் தெரியவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற என் கண்ணுக்குள்ள பாடல் அவ்வளவு பெரிய பாடலாக ஹிட்டானது. ரப்பர் பந்து படத்தின் ப்ரோமோஷனுக்கு வரும் வரை யாருக்கும் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் என்பதெல்லாம் தெரியாது. வைகை, கோரிப்பாளையம், அப்புச்சி கிராமம் படமெல்லாம் பண்ணியிருக்கிறேன் என சொன்னேன். ஊரில் இருப்பவர்களெல்லாம் என்னிடம் உனக்கு இதெல்லாம் தேவையா என்றெல்லாம் கேட்டார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முயற்சி செய்து செய்து எதுவும் செட்டாகவில்லை. 

Continues below advertisement

தமிழில் வைகை படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகப்பெரிய அளவில் கனவு கண்டேன். அந்த நேரத்தில் தான் அமலா பால் நடித்த மைனா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அமலாவும் கேரளா என்பதால் அவர்களை மாதிரி நாமும் வருவோம் என நினைத்தேன். அவரைப் போல நானும் விஜய், சூர்யா படத்தில் நடிப்பேன் என்ற எண்ணத்தில் தான் வந்தேன். ஆனால் வைகை படம் சரியாக செல்லவில்லை. அதன்பிறகு யாரும் என்னை படத்துக்காக அணுகவில்லை. ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன்.

Also Read: பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?

இதற்காக என் படிப்பை விட்டு விட்டு தான் சென்னைக்கு நான் வந்தேன். அப்பாவுக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. 10ம் வகுப்பு முடித்து விட்டு நடிக்க வந்து விட்டேன். தினமும் இரவு இதெல்லாம் நினைத்து அழுவேன். சரி நாம் முயற்சி செய்துக் கொண்டே இருப்போம். என்றைக்காவது கிளிக் ஆகும் என்ற நம்பிக்கை இருந்தது. நிறைய மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். சில இடங்களுக்கு செல்லும்போது ரொம்ப பயமாக இருக்கும். ஏ.ஆர்.முருகதாஸை பார்க்கப் போகலாம் என சொல்லி என் அம்மாவிடம் நகையெல்லாம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள்.

அதன்பிறகு அம்மாவுக்கும் பயம் வந்து விட்டது. அந்த நேரத்தில் வைகை, கோரிப்பாளையம் இரண்டும் வெளியாகி இருந்த நிலையில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன்பிறகு தமிழ்நாட்டை விட்டு வெளியேறி கேரளா சென்றேன். அங்கு மலையாள சினிமாவில் முயற்சி செய்தேன்.  அந்த காத்திருந்த நேரம் சும்மா இருப்பது சரி என தோன்றாமல் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியலில் நடிப்பது போன்ற முடிவுகள் எடுத்தேன். லப்பர் பந்து படம் வந்த பிறகு தான் எனக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது. நிறைய பேர் கண் கலங்கினார்கள். இன்றைக்கும் 10 சதவிகிதம் மேனேஜர்கள் சினிமாவில் ஏமாற்றுவதற்காகவே இருக்கிறார்கள் என நடிகை ஸ்வாசிகா தெரிவித்துளார்.