தமிழக அரசியல் மாற்றம்

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி புரிந்து வந்தது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என  கருத்து கணிப்புகள் வெளியான நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

Continues below advertisement

ஆனால் தவெக ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவிற்கு பல்டி அடித்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்த நிலையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்

அதே நேரம் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்த நிலையில் அந்த நிர்வாகிகளின் பதவிகளை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

Continues below advertisement

எனவே காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றால் அந்த இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என திட்டமிட்டனர். ஆனால்  தமிழகத்தில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. 

இடைத்தேர்தல் நடத்த தடை

இதனால் தவெக சார்பாக மீண்டும் போட்டியிடலாம் என திட்டமிட்டவர்களின் கனவிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். அதே நேரம் அதிமுகவில் இருந்து மீண்டும் தவெகவில் இணைந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவும் அக்கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது.

இந்த நிலையில், வாரந்தோறும் சனிக்கிழமை தவெகவில் அதிமுகவினர் இணையும் விழாவில் இந்த வாரம் யாரும் இணையவில்லை. ஏற்கனவே தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை, எம்எல்ஏ பதவியும் போயிருச்சு. இந்த நிலையில் தவெகவில் இணையலாம் என காத்திருந்த 10 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் பின்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணைய யோசிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்

எனவே அதிமுக சார்பாக சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த சில வாரங்களாக தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவினருடன் பேசுவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு சென்றவர்களுக்கே ஒன்றும் கிடைக்காத நிலையில், எம்எல்ஏ பதவியும் இல்லாமல் தவெகவில் மாவட்ட செயலாளர் என எந்த பொறுப்பும் இல்லாமல் என்ன செய்வது என பின்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.