எப்படியெல்லாமோ நடிக்க ஆசைப்பட்ட தன்னுடைய சினிமா கேரியரில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பாக நடிகை ராதா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


கடந்த 2002 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக ராதா அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிக முக்கிய காமெடி படமாக இருக்கும் சுந்தரா டிராவல்ஸ் படம் ஒன்றே அவருக்கான அடையாளமாக மாறிப்போனது.மிகப்பெரிய அளவில் சினிமாவில் கலக்குவார் என பார்த்தால் கார்த்திக்குடன் கேம், சத்யராஜ் நடித்த அடாவடி, கரண் நடித்த காத்தவராயன் படத்திலும் நடித்தார். 


இதன்பிறகு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ராதா, 15 வருடங்களுக்கு பிறகு விதார்த், கலையரசன் ஆகியோர் நடிக்கும் படத்தில் முதன்மையான வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பாரதி கண்ணம்மா சீசன் 2விலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராதா, தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். 


வடிவேலுவுக்கு ஈகோவா? 


அப்போது அவரிடம் இப்போது வடிவேலு மீது துணை நடிகர்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே. நீங்கள் அறிமுகமான முதல் படத்தில் அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “வடிவேலு சார் எல்லோருடன் அன்பாக இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அரவணைத்து செல்வார். வசனம் எல்லாம் நான் எப்படி போகிறேனோ அதற்கேற்றமாதிரி அவரும் பேசுவார். சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஒரு காட்சியில் 3 முறை வசனம் பேச வேண்டும். எனக்கு அந்த காட்சியில் உதவினார். அவரிடம் ஈகோ எல்லாம் கிடையாது. இப்ப உள்ள வடிவேலு பற்றி எனக்கு தெரியாது. நாங்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவோம். என்னை பார்க்கும் மக்கள் எல்லாம் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் வசனத்தை பேச சொல்லி கேட்பதை பார்க்கும் போது மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என ராதா கூறினார். 


சினிமா கேரியர் குறித்து வருத்தம் 


தொடர்ந்து தனது சினிமா கேரியர் குறித்து பேசினார். “அதேபோல் சத்யராஜை நான் முதன்முதலில் அடாவடி படத்துக்காக விசாகப்பட்டினத்தில் தான் பார்த்தேன். அப்போது விக் இல்லாமல் இருந்ததால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. நான் யாருடா இது அப்படின்னு பார்த்துட்டு இருந்தேன். அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் நடித்தேன். தொடர்ந்து ரீ எண்ட்ரீ படமாக ரௌடி பேபி படத்தில் நடித்தேன். 


நான் சின்ன கவுண்டர் சுகன்யா, கிழக்கு வாசல் ரேவதி ஆகியோர் மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னம்மா இது இப்படியாக நினைத்து, இந்த மாதிரி நடிச்சிருக்கிறீயேன்னு நினைக்க வேண்டாம். அது இயற்கையோட கோபம். நாம் வாழ்க்கையில என்னெல்லாம் நடக்கக்கூடாது என நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். இது ஒரு மிகப்பெரிய உதாரணம். இப்ப நான் அந்த நிகழ்வுகளை குப்பையாக கூட மதிக்கவில்லை. அதை மொத்தமாக மூடி விட வேண்டும் என நினைக்கிறேன். அதை நினைத்து ஃபீல் பண்ணுகிறேன், கவலைப்படுகிறேன். காதல் பற்றி என்னிடம் கேட்டால் அதெல்லாம் எனக்கு தேவையில்லை. வேலை பார்க்கணும், சம்பாதிக்கணும் என்று தான் தோன்றுகிறது. உண்மையாக அன்பு கிடைத்தால் அதனை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்” என ராதா தெரிவித்துள்ளார்.